சமூக வலைதளங்களில் கிரிக்கெட் வீரர் தோனியின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது
கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் தோனி மிகவும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இதனையடுத்து ரசிகர்களின் ஒருதரப்பினர் தோனிக்கு வயதாகிவிட்டது. அவர் ஓய்வு பெற வேண்டும் என கருத்து தெரிவித்தனர். பலரும் தோனிக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த ஆண்டு உலகக்கோப்பை நடைபெறவுள்ள நிலையில் தோனி ஓய்வு பெற வேண்டும் என்று குரல்கள் எழுந்தது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த சச்சின், தோனியின் ஓய்வு குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும். வீரர்களுக்கு முன் பல்வேறு சவால்கள் இருக்கின்றன, குறிப்பாக உடற்தகுதி, பேட்டிங் என இருக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தொடர்ச்சியாக மூன்று அரைசதங்கள் அடித்து தோனி தன்னை மீண்டும் நிரூபித்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போதும், தோனிக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் பலரும் பதாகைகளை ஏந்தியவாரு இருந்தனர். அதில், தோனி ஓய்வு பெறக் கூடாது என்று சில ரசிகர்கள் தங்கள் பதாகையில் எழுதி இருந்தனர்.
தன்னை மீண்டும் நிரூபிக்க தொடங்கியிருக்கும் தோனி தனது பேட்டிங் மூலம் தான் இன்னும் சோர்வடையவில்லை என்று தெரிவித்தே வருகிறார். அதே வேளையில் சச்சின் கூறியவாறு வீரர்களுக்கு முன்னால் இருக்கும் மற்றொரு சவால் உடற்தகுதி. தற்போது தோனி, உடற்தகுதியிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்ட் ஆகும். இந்நிலையில் தோனியின் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜிம்மில் உடற்பயிற்சி முடித்துவிட்டு சிரித்தவாறே நிற்கும் தோனியின் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் பகிர்ந்து தோனியின் உடற்கட்டை மெச்சி வருகின்றனர். 37 வயதிலும் நல்ல உடற்தகுதியுடன் இருக்கும் தோனி இன்னும் சில உலகக்கோப்பைகள் கூட ஆடலாம் என்று பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர், ''தோனியின் உடல்தகுதி குறித்து பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவருடன் ஒரு ஓட்டப்பந்தயம் நடத்திவிட்டு பேசட்டும்'' என்றும் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.