மூச்சிறைக்க ஓடிவந்து தாவிப்பாய்ந்து கேட்ச் பிடித்த பிலிப்ஸ்! ஹார்டின்ஸ் அள்ளும் வீடியோ!

மூச்சிறைக்க ஓடிவந்து தாவிப்பாய்ந்து கேட்ச் பிடித்த பிலிப்ஸ்! ஹார்டின்ஸ் அள்ளும் வீடியோ!
மூச்சிறைக்க ஓடிவந்து தாவிப்பாய்ந்து கேட்ச் பிடித்த பிலிப்ஸ்! ஹார்டின்ஸ் அள்ளும் வீடியோ!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டேவான் கான்வே , பின் ஆலன் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க துவங்கியது இந்த கூட்டணி. குறிப்பாக பின் ஆலன் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை நாலாப்புறமும் பறக்கவிட்டு துவம்சம் செய்தார். எதிர்கொள்ளும் பந்துகளை பவுண்டரி,சிக்சராக மாற்றும் எண்ணத்தில் விளையாடிய பின் ஆலன், விறுவிறுவென அரைசதத்தை நோக்கி முன்னேறினார்.

இதனால் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் அதிரடியாக உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய ஆலன் 16 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.தொடர்ந்து கேன் வில்லியம்சன் களமிறங்கிய நிலையில் மறுபுறம் அதுவரை அமைதி காத்த கான்வே அதிரடியை தொடங்கினார்.

கான்வே சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த நிலையில் மறுமுனையில் கேன் வில்லியம்சன் 23 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த கிளென் பிலிப்ஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்த நிலையிலும். கான்வே தனது அதிரடியை தொடர்ந்து ரன்கள் குவித்தார். கடைசியாக களம் கண்ட நீசம் கடைசி நேரத்தில் சிக்ஸர்களை பறக்க விட, 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை குவித்தது. கான்வே 92 ரன்களுடன், ஜிம்மி நீஷம் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஓப்பனராக களமிறங்கிய வார்னர் 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளிக்க, அடுத்ததாக ஆரோன் பின்ச் 13 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். தொடர்ந்து மிட்சேல் மார்ஷ் 16 ரன்களை மட்டும் எடுத்த நிலையில் நடையைக் கட்ட, மேக்ஸ்வெலுடன் ஜோடி சேர்ந்தார் மார்கஸ் ஸ்டோனிஸ். தொடர் விக்கெட் வீழ்ச்சியால் திணறிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியை தனது ஆமை வேக ஆட்டத்தால் மேலும் கலங்கடித்தார் ஸ்டோனிஸ்.

13 பந்துகளை எதிர்கொண்டு 7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ஸ்டோனிஸ், அடுத்து சாண்ட்னர் வீசிய பந்தை சிக்ஸராக மாற்ற முயன்றார். ஆனால் பந்து சரியாக பேட்டில் படாத காரணத்தால் எல்லைக்கோட்டுக்கு முன்னால் க்ளென் பிலிப்ஸ் இருந்த திசை நோக்கி பயணித்தது. பந்தின் பாதையை சரியாக கணித்து ஓடி வந்து தாவிப் பாய்ந்து அந்த பந்தைப் பிடித்தார் பிலிப்ஸ்.

பிலிப்ஸ் பாய்ந்து கேட்ச் பிடித்த வீடியோவை இணையவாசிகள் பலரும் பகிர்ந்து “க்ளென் பிலிப்ஸ் ஒரு அசாத்தியமான பீல்டர்” என குறிப்பிட்டு பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். அடுத்து களமிறங்கிய டிம் டேவிட் 11 ரன்களில் வெளியேற, சிறிது நம்பிக்கை அளித்த மேக்ஸ்வெல் 20 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் 17.1 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்து 89 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com