முதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக் அவுட்: உமேஷ், இஷாந்த் சிறப்பு!

முதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக் அவுட்: உமேஷ், இஷாந்த் சிறப்பு!
முதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக் அவுட்: உமேஷ், இஷாந்த் சிறப்பு!

எஸ்ஸெக்ஸ் அணியுடனான பயிற்சிப் போட்டியில் இரண்டாம் நாளில், சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார் தினேஷ் கார்த்திக்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணி தீவிரப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இதில் ஒரு கட்டமாக, எஸ்ஸெக்ஸ் கவுண்டி அணியுடனான பயிற்சிப் போட்டியில் பங்கேற்றுள்ளது. 

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த இந்திய அணி, திணறியது. முதல் ஓவரிலேயே இந்திய அணி, தவானின் விக்கெட்டை பறிகொடுத்தது. 3வது ஓவரில் புஜாரா ஒரு ரன்னில் நடையைக் கட்ட, இந்திய அணி 5 ரன்களை எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

 பின்னர் முரளி விஜய்யுடன், ரஹானே சேர்ந்தார். இருவரும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். ஆனால், இந்தப் போராட்டமும் சிறிது நேரம்தான் நீடித்தது. 17 ரன் எடுத்த நிலையில், ரஹானே ஆட்டமிழந்தார். அடுத்து முரளி விஜய்யுடன் கேப்டன் விராத் கோலி இணைந்தார். 28 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. நிதானமாக ஆடி வந்த முரளி விஜய் 53 ரன்கள் எடுத்த நிலையில் வால்டர் பந்துவீச்சில் போல்டானார்.

அடுத்து கோலியுடன் இணைந்தார் கே.எல்.ராகுல். இவரும் சிறப்பாக ஆடினர். கோலி 68 ரன்னில் வால்டர் பந்து வீச்சில் சோப்ராவிடமும் ராகுல் 58 ரன்னில் நிஜார் பந்துவீச்சில் டிக்சனிடமும் கேட்ச் கொடுத்து அவுட் ஆயினர். அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 82 ரன்களுடனும் ஹர்திக் பாண்ட்யா 33 ரன்களுடன் இரண்டாம் நாள் ஆட்டத்தை நேற்று தொடங்கினர்.

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக், சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆனார். பாண்ட்யா 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந் தார். அடுத்து கருண்நாயர் எளிதாக விக்கெட்டை பறிகொடுக்க, ரிஷப் பன்ட் கடைசியாக களமிறங்கினார். அவர் ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இந்திய அணி இறுதியாக 395 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. எஸ்ஸெக்ஸ் அணி சார்பாக வால்டர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய எஸ்ஸெக்ஸ் அணியில் பிரவுன் மற்றும் வருண் சோப்ரா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினர். பிரவுனை (11 ரன்) உமேஷ் யாதவும் சோப்ராவை (16) இஷாந்த் சர்மாவும் எல்பிடபிள்யூ ஆக்கினர். அடுத்து வந்த டாம் வெஸ்லியும் பெப்பரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். வெஸ்லி (57) விக்கெட்டை ஷர்துல் தாகூர் வீழ்த்தினர். பெப்பரை (68) கிளீன் போல்டாக்கினார் இஷாந்த் சர்மா. அடுத்த வந்த ரிஷி படேல் (19) விக்கெட்டையும் உமேஷ் யாதவ் சாய்த்தார். ஆட்ட நேர முடிவில் எஸ்ஸெக்ஸ் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்துள்ளது. மூன்றாம் நாள் ஆட்டம் ஆட்டம் இன்று நடக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com