ரிஷப் பண்ட்-க்கு உதவியவர்களுக்கு மத்திய அரசு கொடுக்கப்போகும் உயரிய கௌரவம்!

ரிஷப் பண்ட்-க்கு உதவியவர்களுக்கு மத்திய அரசு கொடுக்கப்போகும் உயரிய கௌரவம்!
ரிஷப் பண்ட்-க்கு உதவியவர்களுக்கு மத்திய அரசு கொடுக்கப்போகும் உயரிய கௌரவம்!

இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் நேற்று அதிகாலை கார் விபத்தில் சிக்கியபோது, அவரை உடனடியாக காப்பாற்ற உதவியர்கள், மத்திய அரசின் ‘நற்கருணை வீரன்’ என்ற விருதின் கீழ் கௌரவிக்கப்படவுள்ளதாக உத்தரகண்ட் டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், நட்சத்திர வீரருமான ரிஷப் பண்ட் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்துக்கொண்டு நாடு திரும்பியிருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை தனது மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்யூவி சொகுசுக் காரில் டேராடூன் - டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பண்ட் சென்றுக்கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்தக் கார் சாலையில் இருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் அவரின் கார் முழுவதும் தீப்பிடிப்பதற்குள் கார் ஜன்னல் கதவை உடைத்துக்கொண்டு ரிஷப் பண்ட் குதிக்க முயற்சித்தபோது, அவ்வழியாக வந்த அரியானா பேருந்து ஒன்றின் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் சில பயணிகள் அவரை படுகாயங்களுடன் காப்பாற்றி ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருகில் இருந்த ரூர்க்கி மருத்துவமனையில் முதலில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் டேராடூன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு ரிஷப் பண்டிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரிஷப் பண்ட்டின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறினாலும், தலை, முதுகு மற்றும் காலில் ஏற்பட்ட காயங்களுக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரிஷப் பண்ட் தன்னந்தனியாக அதிவேகத்தில் காரை ஓட்டி வந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், அவர் தூக்கக் கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ரிஷப் பண்ட் விபத்தில் படுகாயம் அடைந்தப் பிறகு அவரை விபத்தில் இருந்து காப்பாற்றிய அரியானா பேருந்து ஓட்டுநர் சுஷில் மான் உள்பட, விபத்தில் உதவியர்களுக்கு மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை துறை அமைச்சகத்தால் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘நற்கருணை வீரன்’ என்ற விருதின் கீழ் கௌரவிக்கப்படவுள்ளதாக உத்தரகண்ட் டிஜிபி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு முதல் ஒரு மணிநேரம் என்பது மிகவும் முக்கியமானது. சொல்லப்போனால் அந்த ஒரு மணிநேரம் பொற்காலம் என்றே சொல்லலாம். அந்த ஒரு மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவருக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியமாகிறது. அவ்வாறு சமூக அக்கறையுடன் உதவியவர்களை ஊக்குவிப்பதற்காக ‘நற்கருணை வீரன்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஓட்டுநர் சுஷிலும், நடத்துநர் பரம்ஜித் தான் ரிஷப் பண்ட்டின் கார் விபத்தை முதலில் பார்த்திருக்கின்றனர். ரிஷப் பண்ட் காரில் இருந்து வெளியே வர உதவியதோடு, அவரை ஆம்புலன்சில் ஏறவும் உதவி செய்திருக்கின்றார்கள். மேலும், அரியானா போக்குவரத்து துறை சார்பில், இருவருக்கும் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த விபத்து குறித்து பேருந்து ஓட்டுநர் சுஷில் கூறியதாவது, “முதலில், டிவைடரில் மோதி சுழன்றுக்கொண்டே வேகமாக வந்த அந்த கார், எங்களது பேருந்தை மோதிவிடும் என நினைத்துப் பயந்தேன். பின்னர் உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு நான் காரை நோக்கி ஓடி வந்தபோது, அதன் டிரைவர் (ரிஷப் பண்ட்) ஜன்னலை உடைத்து பாதி வெளியே வந்திருந்தார். அவர் என்னிடம், 'நான் கிரிக்கெட் வீரர். எனது செல்ஃபோனில் அம்மாவிற்கு போன் செய்யுங்கள்’ என கூறினார். ஆனால், நாங்கள் அழைத்தப்போது அவரின் மொபைல் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.

நான் கிரிக்கெட் விளையாட்டை பார்த்து இல்லை. ரிஷப் பண்ட் என்றால் யார் என்று எனக்கு தெரியாது. ஆனால், எனதுப் பேருந்தில் இருந்த பலருக்கு அவரை அடையாளம் தெரிந்திருந்தது. அவரை காரில் இருந்து தூக்கிவிட்ட பின், அவரது காரை முழுவதுமாக சோதித்துப் பார்த்தேன், வேறு யாரும் இருக்கிறார்களா என்று. காரில் ஒரு ப்ளூ பையும், 7 முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை இருந்தது. இரண்டையும் ஆம்புலன்ஸில் இருந்த அவரிடமே கொடுத்துவிட்டேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், டெல்லி அணிக்காக விளையாடியபோது எடுத்த பழைய வீடியோ ஒன்றில், ஷிகர் தவானிடம், தனக்கு ஏதாவது ஆலோசனை சொல்ல வேண்டும் என்றால் என்ன சொல்வீர்கள் என ரிஷப் பண்ட் கேட்கும்போது, அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல், "நீ கவனமாக கார் ஓட்ட வேண்டும்" என்று அறிவுரை தெரிவிக்கும் வீடியோ, ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கியப் பிறகு தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பண்ட்டுக்கு ஷிகர் தவான் சொல்லும் இந்த அறிவுரையை பகிர்ந்து, `விரைவில் நலம்பெறுங்கள் ரிஷப். இனியாவது வாகனத்தை மெதுவாக ஓட்டுங்கள்’ என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com