அடுத்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. ஆனால், போட்டி எங்கு நடைபெறும் என்பது முடிவாகவில்லை.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் உறுப்பினராக உள்ள ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 1984 முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான போட்டித் தொடர், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது. இதில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் 2020-ஆம் ஆண்டில் நடக்கும் ஆசிய கோப்பை தொடரை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர், இப்போது டி20 தொடராக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு முன் நடைபெற இருக்கிறது. இந்த தொடரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலே நடக்கும் எனக் கூறப்படுகிறது.
கடைசியாக இத்தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கடந்த 2008-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடத்தியது. ஆனால் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக, வீரர்களின் பாதுகாப்பு கருதி, அதன் பின் பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படவில்லை.

