
துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 45-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடரஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களை குவித்துள்ளது.
அந்த அணிக்காக தொடக்க வீரர்களாக ஷூப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களம் இறங்கினர். ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் கில், 7 ரன்களில் அவுட்டானார். பின்னர் வந்த திரிபாதி உடன் 72 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் வெங்கடேஷ் ஐயர். இருவரும் அற்புதமான ஷாட்களை விளையாடினர். திரிபாதி 34 ரன்களை சேர்த்து அவுட்டானார்.
39 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தார் வெங்கடேஷ். நடப்பு சீசனில் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 41, 53, 18, 14 மற்றும் 67 (இந்த இன்னிங்ஸ்) ரன்களை எடுத்துள்ளார். 15 மற்றும் 16-வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு கொல்கத்தா வீரர்களை வெளியேற்றினர் பஞ்சாப் பவுலர்கள். கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கனின் மோசமான பார்ம் இந்த ஆட்டத்திலும் தொடர் கதையாகி உள்ளது.
நித்திஷ் ராணா அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 31 ரன்களை சேர்த்தார். Tim Seifert 2 ரன்களில் ரன் அவுட்டானார். தினேஷ் கார்த்திக் 11 ரன்களில் அவுட்டானார்.
பஞ்சாப் அணிக்காக அர்ஷ்தீப் சிங் (3), ரவி பிஷ்னோய் (2), முகமது ஷமி (1) விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பஞ்சாப் விரட்டுகிறது.