9 விரல்களுடன் இந்தியாவுக்காக விளையாடிய கிரிக்கெட் வீரர்: யார் தெரியுமா ?
கிரிக்கெட் வீரர் பார்த்திவ் பட்டேல் தான் இந்தியாவுக்காக 9 விரல்களை மட்டுமே வைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாடியதாக பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
2002 இல் சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவுக்காக அறிமுகமானார் பார்த்திவ் பட்டேல். இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணிக்குள் தனது 17 ஆவது வயதில் அறிமுகமானார். ஜாம்பவான் சச்சினுக்கு பின் இளம் வயதில் இந்திய அணிக்கு அறிமுகமானவர் பார்த்திவ் பட்டேல். மேலும் 2003 இல் நடைபெற்ற உலக்க கோப்பை அணியில் இடம் பெற்றாலும். ராகுல் திராவிட் அந்தத் தொடர் முழுவதும் விக்கெட் கீப்பிங் செய்ததால், பார்த்திவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனையடுத்து ஒருநாள் போட்டிகளுக்கு தினேஷ் கார்த்திக்கும், டெஸ்ட் போட்டிகளு்ககு பார்த்திவ் பட்டேலும் விக்கெட் கீப்பர்களாக திகழ்ந்தார்கள். ஆனால் தோனியின் வருகைக்கு பின்பு இருவருக்கும் இந்திய அணியில் மீண்டும் நுழைவதற்கு வாய்ப்பில்லாமல் போனது. ஆனால் ஐபிஎல் போட்டிகளில் மும்பை, சிஎஸ்கே ஆகிய அணிகளுக்கு பார்த்திவ் சிறப்பாக விளையாடி வந்தார்.
உள்ளூர் போட்டியில் சிறப்பாக ஆடியது, ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடியதன் பலனாக கடந்த 2018 இல் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பார்த்திவ் இடம் பெற்றார். இருந்தாலும் இளம் வீரர் ரிஷப் பந்த் வருகையால் அந்த தொடருக்கு பின் இந்திய அணியில் மீண்டும் பார்த்திவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது 35 வயதான இவர் உள்ளூர் போட்டிகளில் குஜராத் அணி கேப்டனாக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் தான் ஒன்பது விரலுடன் இந்திய அணிக்காக விளையாடிய விஷயத்தை பார்த்தீவ் தெரிவித்துள்ளார். தனது ஆறாவது வயதில் பார்த்திவ்வின் இடது கை சுண்டு விரல் கதவில் சிக்கியதால் இழந்து விட்டார். இதுகுறித்து இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த பார்த்திவ் "எனக்கு ஆறு வயது இருக்கும் போது என் விரல் கதவில் சிக்கிக் கொண்டு துண்டானது. நான் கிரிக்கெட் விளையாட தொடங்கியதும் விக்கெட் கீப்பிங் செய்யும்போது அதன் கிளவுஸ் கடைசி விரலில் சரியாக நிற்காது. அதனால் கிளவுஸில் டேப் ஒட்டி விளையாடுவேன். ஒன்பது விரல்களுடன் இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக ஆடியது பெருமையாக உள்ளது" என தெரிவித்திருக்கிறார்.