ஓப்பனிங் இறங்கிய பண்ட்! ஜடேஜா அதிரடி- தொடரை கைப்பற்றிய இந்தியா

ஓப்பனிங் இறங்கிய பண்ட்! ஜடேஜா அதிரடி- தொடரை கைப்பற்றிய இந்தியா
ஓப்பனிங் இறங்கிய பண்ட்! ஜடேஜா அதிரடி- தொடரை கைப்பற்றிய இந்தியா

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. நேற்று முன்தினம் நடந்த முதலாவது டி20 ஆட்டத்தில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் இந்திய அணி பல மாற்றங்களுடன் களம் கண்டது. முதலாவது ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த விராட் கோலி, பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட் ஆகியோர் இந்த ஆட்டத்தில் இருந்து அணிக்கு திரும்பினர். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. யாரும் எதிர்பாராதவகையில், ரோகித் ஷர்மாவுடன் சேர்ந்து ஓப்பனிங் களமிறங்கினார் ரிஷப் பண்ட். இந்த இந்திய அணியின் புது முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்தது.

துவக்கத்திலேயே அதிரடியாக ரோகித் ஷர்மா விளையாட, பண்டும் தன் பங்குக்கு பவுண்டரிகளாக விளாச ஸ்கோர் விறுவிறுவென எகிறத்துவங்கியது. 5 ஓவர்கள் முடிவில் 50 ரன்களை கடக்கும் அளவுக்கு அட்டகாசமாக பந்துகளை சிதறடித்தது இந்த புதுக் கூட்டணி. ரிச்சர்ட் பந்துவீச்சில் ரோகித் தனது விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்து களத்திற்கு வந்த கோலி வெறும் ஒரு ரன்னில் காலி ஆகி வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

இதையடுத்து ரிஷப்பும் தனது விக்கெட்டை பறிகொடுக்க, இந்திய அணி கடும் நெருக்கடிக்கு ஆளானது. அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுக்க நெருக்கடி மேலும் அதிகரித்தது. ஆனால் சீட்டுக்கட்டு போல ஒரு பக்கம் சரிந்து கொண்டிருக்க, மறுபக்கம் ரன் ரேட்டும் வீழ்ந்து கொண்டிருக்க இரண்டையும் தாங்கி பிடித்தார் ஜடேஜா. பவுண்டரிகளாக விளாசி சரிந்த அணியை சிறப்பாக மீட்டார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்களை குவித்தது. 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்கமே அதிர்ச்சி தான். முதல் பந்திலேயே ஜேசன் ராயை வீழ்த்தி அதகளம் செய்தார் புவனேஸ்வர். ஆபத்தான பேட்டரான ஜோஸ் பட்லரையும் வெறும் 4 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார் புவனேஸ்வர். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் பும்ராவின் அதிவேகத்தில் க்ளீன் போல்டாக, இங்கிலாந்தின் டாப் ஆர்டர் நிலை குழைந்து போனது.

இதையடுத்து மிடில் ஆர்டரில் களமிறங்கிய டேவிட் மலன் மற்றும் ஹேரி ப்ரூக்கை தனது சுழலால் வெளியேற்றினார் சஹால். பின்னர் களமிறங்கி சில சிக்ஸர்கள், பவுண்டரிகள் விளாசி அச்சுறுத்தலாக திகழ்ந்த மொயின் அலியின் விக்கெட்டை வீழ்த்தினார் ஹர்திக். பின்னர் களமிறங்கியவர்களும் சோபிக்காமல் போகவே 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்ற இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com