ஒருநாள் போட்டியில் முதல் சதம் விளாசிய ரிஷப் பண்ட்.. தொடரை வென்றது இந்திய அணி

ஒருநாள் போட்டியில் முதல் சதம் விளாசிய ரிஷப் பண்ட்.. தொடரை வென்றது இந்திய அணி
ஒருநாள் போட்டியில் முதல் சதம் விளாசிய ரிஷப் பண்ட்.. தொடரை வென்றது இந்திய அணி

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 2 ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

இந்நிலையில், தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் 3 ஆவது போட்டி, மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்ட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். இந்த கூட்டணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி அளிக்கும் வகையில் அபாரமாக பந்துவீசினார் சிராஜ்.

சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே பேர்ஸ்டோ டக் அவுட் ஆகிய நிலையில், அடுத்து களமிறங்கிய ஜோ ரூட்டும் அதே ஓவரின் கடைசி பந்தில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜேசன் ராய் ஆகியோர் இணை நிதானமாக விளையாடினர். 12 ரன்களிலேயே இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்த போதும் இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை உயர்த்தியது. ஓவருக்கு ஒரு பவுண்டரி அடித்து அதிரடி காட்டியதால், 7.1 ஓவரில் இங்கிலாந்து அணி 50 ரன்களை கடந்தது.

ஹர்திக் பாண்ட்யா வீசிய 10 ஓவரின் ஐந்தாவது பந்தில் ஜேசன் ராய் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில் 7 பவுண்டரி உட்பட 41 ரன்கள் எடுத்து இருந்தார். அடுத்து பென் ஸ்டோக்ஸ் உம் ஹர்திக்கிடம் சிக்கி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து இணை சேர்ந்த பட்லர் - மொயின் அலி ஆகியோர் பொறுப்புணர்ந்து நிதானமாக ஆடினர். பட்லர் அரைசதம் கடந்த நிலையில் இந்த ஜோடியை ஜடேஜா பிரித்தார்.

34 ரன்கள் எடுத்த நிலையில் மொயின் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த லிவிங்ஸ்டனை பாண்டியா வழியனுப்பி வைத்தார். பின் வந்தவர்கள் பெரிய அளவில் ரன் குவிக்காமல் விறுவிறுவென விக்கெட்டை பறிகொடுத்ததால் இங்கிலாந்து அணி 45.5 ஓவர்கள் முடிவில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கும் துவக்கம் அதிர்ச்சியே காத்திருந்தது.

1 ரன் எடுத்த நிலையில் தவான் விக்கெட்டை வீழ்த்தினார் டோப்லே. அடுத்து கேப்டன் ரோகித் 17 ரன்களில் அதே டோப்லேவிடம் விக்கெட்டை பறிகொடுக்க, கோலி அதே ஆப்சைட் ஷாட்டை அடித்து அவுட்டாகி இம்முறையும் ஏமாற்றமளித்தார். அடுத்து இணை சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் நிதானமாக ஆடினர். ஆனால் சூர்யாவும் 16 ரன்களில் அவுட்டாக, களத்திற்கு வந்தார் ஹர்திக் பாண்டியா. பண்டும் பாண்டியாவும் சேர்ந்து சரிவில் விழுந்த அணியை மீட்கும் பணியில் சிறப்பாக ஈடுபட்டனர்.

தடுப்பாட்டத்தை கையிலெடுத்து பண்ட் அரைசதம் கடந்த நிலையில், அதிரடியை கையிலெடுத்து பாண்டியாவும் அரைசதம் விளாசி நம்பிக்கை அளித்தார். இருவரும் சேர்ந்து 133 ரன்கள் குவித்த நிலையில் இந்த ஜோடியை பிரைடன் கார்ஸ் பிரித்தார். 71 ரன்கள் குவித்த நிலையில் பெவிலியன் திரும்பினார் பாண்டியா. இதையடுத்து பண்ட் உடன் இணை சேர்ந்த ஜடேஜா, இலக்கை நோக்கி அணியை அழைத்துச் செல்லும் வகையில் பொறுமையாக விளையாடி வருகிறார்.

கடைசியில் சிக்ஸர், பவுண்டரிகளையும் சரியான நேரத்தில் சிங்கிள்களையும் அடித்து விளையாடிய ரிஷப் 105 பந்துகளில் சதம் விளாசினார். ஒருநாள் போட்டிகளில் அவரது முதல் சதம் இதுவாகும். பின்னர் வில்லே வீசிய 42வது ஓவரில் தொடர்ச்சியாக 5 பவுண்டரிகளை விளாசி தள்ளினார் ரிஷப். கடைசி பந்தில் ஒரு ரன் அடித்த அவர், அடுத்த ஓவரின் முதல் பந்தில் மீண்டும் பவுண்டரி விளாசி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஒருநாள் தொடரை வென்றது. ரிஷப் பண்ட் 113 பந்துகளில் 125 ரன்கள் குவித்தார். இதில் இரண்டு சிக்ஸர், 16 பவுண்டரிகள் அடங்கும். 

இங்கிலாந்து மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்று அசத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com