வெள்ளிப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் ஸ்னூக்கர் வீரர் மரணம்! நிதிப்பிரச்னையால் விபரீத முடிவு?

பாகிஸ்தானை சேர்ந்த 28 வயது ஸ்னூக்கர் வீரரான மஜித் அலி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
majid ali
majid aliTwitter

பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னணி ஸ்னூக்கர் வீரர் மஜித் அலி (28). ஆசிய அளவில் ஸ்னூக்கர் போட்டிகளில் பங்குபெற்று 21 வயதுக்குட்பட்டோருக்கான வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் பல சர்வதேச நிகழ்வுகளில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவர், தேசிய சர்க்யூட்டில் முதல் தரவரிசை வீரராக இருந்து அசத்தியுள்ளார். பல திறமைகளை உள்ளடக்கியவரான மஜித், பஞ்சாப் பைசலாபாத் அருகே உள்ள தனது சொந்த ஊரான சாமுந்திரியில் வசித்து வந்தார்.

இந்நிலையில் வியாழக்கிழமை அன்று வீட்டிலேயே மரம் வெட்டும் கருவியால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. சிறுவயதிலிருந்தே அதிகப்படியான மன அழுத்தத்தில் இருந்துவந்த அவர், தற்போது தற்கொலையில் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளார். அவருடைய மரணம் குறித்து தெரிவித்திருக்கும் அவரின் சகோதரர் உமர், “இதை எங்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை, ஏனென்றால் அவருடைய உயிரை மாய்த்துக்கொள்வார் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்த்ததில்லை” என்று கூறியுள்ளார்.

நிதிப்பிரச்னையால் உயிரிழந்தாரா?

மஜித் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் போட்டி அமைப்பின் தலைவரான ஆலம்கிர் ஷேக், “மஜித் மிகவும் திறமையானவர். மரணத்திற்கானவராக அவர் இல்லை, இளமையாக இருந்தார். பாகிஸ்தானுக்கு இன்னும் பல விருதுகளை கொண்டு வருவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். தற்போது அவருடைய இழப்பானது ஒட்டுமொத்த சமூகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது” என்று கூறினார். மேலும் மஜித்தின் மரணத்திற்கு நிதிப்பிரச்னை காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்பட்ட நிலையில், அவருக்கு எந்த நிதி நெருக்கடியும் இல்லை என்பதையும் ஷேக் தெளிவு படுத்தியுள்ளார். இருப்பினும் சமூக வலைதளங்களில் பலரும் அவர் நிதிப்பிரச்னை காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன.

முஹம்மது யூசுப் மற்றும் முஹம்மது ஆஷிஃப் போன்ற நட்சத்திர வீரர்கள் பாகிஸ்தானிற்காக உலக மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றதற்கு பிறகு, ஸ்னூக்கர் அந்நாட்டின் உயர்தர விளையாட்டாக மாறியுள்ளது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் மரணமடைந்த இரண்டாவது ஸ்னூக்கர் வீரர் மஜித் ஆவார். கடந்த மாதம், மற்றொரு சர்வதேச ஸ்னூக்கர் வீரரான முஹம்மது பிலால் மாரடைப்பால் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com