'இன்றைய போட்டியில் ரன்களை குவிப்போம்' டாஸ் வென்ற பாக்.கேப்டன் பேட்டி
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ் தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. இரண்டு லீக்கிலும் தோல்வி யடைந்த இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேறிவிட்டன.
அடுத்து சூப்பர் 4 சுற்று போட்டி நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் செல்லும். இந்த நிலையில் சூப்பர்-4 சுற்றில் துபாயில் இன்று நடக்கும் ஒரு போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. சூப்பர்-4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பங்களாதேஷை வென்ற இந்திய அணி, இன்றைய ஆட்டத்திலும் வெற்றி கண்டால் இறுதிப்போட்டியை உறுதி செய்யும். நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத அணியான இந்தியா, பாகிஸ்தானுடன் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த லீக் போட்டியில் 162 ரன்களில் சுருட்டியது.
இந்நிலையில் இப்போது தொடங்கவுள்ள இந்தியா - பாகிஸ்தான் இடையே நடக்கும் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது "இன்றையப் போட்டியில் நிறைய ரன்களை குவிப்போம். முகமது ஆமீரும், ஷதாப்பும் சிறப்பாக விளையாடுவார்கள்" என கூறியுள்ளார். இந்தப் போட்டியில் விளையாடவுள்ள அணியில் வீரர்களில் மாற்றமில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.