ஆசிய கோப்பையை பாகிஸ்தான் நடத்தாது! பொருளாதார நெருக்கடியால் அமீரகத்துக்கு மாற்ற திட்டம்!

ஆசிய கோப்பையை பாகிஸ்தான் நடத்தாது! பொருளாதார நெருக்கடியால் அமீரகத்துக்கு மாற்ற திட்டம்!
ஆசிய கோப்பையை பாகிஸ்தான் நடத்தாது! பொருளாதார நெருக்கடியால் அமீரகத்துக்கு மாற்ற திட்டம்!

பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த ஆசியகோப்பையை பாகிஸ்தானில் இருந்து மாற்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவெடுத்திருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் அனைத்தும் பங்கேற்ற அவசர கூட்டமானது, நேற்று சனிக்கிழமை அன்று பஹ்ரைனில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் கவுன்சில் தலைவர் சேதி தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு பிறகு ஆசிய கோப்பையை நடத்தும் முழுவிவரம் குறித்து வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆசியகோப்பையானது 2023ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் தொடரானது 2023ல் செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா பாகிஸ்தானில் நடக்கும் ஆசியகோப்பையில், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளுக்குமிடையேயான அரசியல் பதற்றம் காரணமாக இந்தியா பங்கேற்காது என தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ” வரவிருக்கும் 2023ஆம் ஆண்டின் ஆசியக்கோப்பை குறித்த ஆக்கப்பூர்வமான உரையாடலை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தியது. தொடரை நடத்துவதை உறுதி செய்யும் நோக்கில் அதற்கான செயல்பாடுகள், காலக்கெடு மற்றும் மற்ற முக்கிய விவரங்கள் பற்றிய விவாதங்களைத் தொடர்ந்து மேற்கொள்ள வாரியம் சம்மதித்துள்ளது. ஆசியகோப்பை குறித்த முக்கியமான முடிவுகள் மார்ச் மாதம் மீண்டும் நடத்தப்படும் அடுத்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

என்னதான் முடிவுகள் அடுத்தமாதம் தெரிவிக்கப்படும் என்று கூறினாலும், நிச்சயம் பாகிஸ்தான் ஆசியகோப்பையை நடத்த வாய்ப்பில்லை என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறியிருக்கும் அவர், “ பாகிஸ்தானில் ஆசியகோப்பை நடைபெற்றால் இந்தியா பங்கேற்க மறுப்பு தெரிவித்திருக்கும் நிலையில், விராட்கோலி, ரோகித் சர்மா, சுப்மன் கில் போன்ற வீரர்கள் இல்லாத தொடரில் இன்வஸ்ட் செய்ய பல ஸ்பான்சர்கள் பின்வாங்கியதாக” அவர் கூறினார்.

மேலும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “ பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சேத்தி தற்போது தான் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். முதல் கூட்டத்திலேயே தொடரை நடத்துவதை விட்டுக்கொடுத்திருந்தால், அது அவருக்கு கெட்டபெயராக மாறியிருக்கும் “ என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தற்போது கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அங்கு ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு 277 பாகிஸ்தான் ரூபாய்க்கு சமமாக இருப்பதால் பணவீக்கம் நாட்டை கடுமையாக பாதித்துள்ளது. என்னதான் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தொடரை நடத்த மானியம் கொடுத்தாலும், ஆசிய கோப்பை போன்ற உயர்மட்ட தொடரை நடத்துவது PCB கஜானாவில் ஒரு மிகப்பெரிய ஓட்டையை ஏற்படுத்திவிடும். எனவே தான் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு தொடரை யுஏஇ-ல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

மற்றொரு காரணமாக, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலானது ஆப்கானிஸ்தானிற்கு வழங்கி வரும் ஆண்டு பட்ஜெட்டை 6லிருந்து 15 சதவீதமாக மாற்ற முடிவு செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கான கிரிக்கெட் புத்துயிர் பெறுவதற்கு, ஆப்கானிஸ்தான் வாரியத்திற்கு அனைத்து வழிகளிலும் உதவுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுதியளித்துள்ளது. தற்போது அங்கு நடைபெற்று வரும் தலிபான் ஆட்சியில் பெண்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொடரில் லீக் போட்டிகளில் பங்கேற்க ஜப்பான் மற்றும் இந்தோனேசியா போன்ற அணிகளையும் சேர்க்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஒப்புதல் வழங்கி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com