
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 297 ரன்கள் குவித்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய தனுஷ்கா குணதிலகா மற்றும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ஃபெர்னாண்டோ 4 (6) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து நடையை கட்டினார். ஆனால் தனுஷ்கா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதற்கிடையே வந்த கேப்டன் திரிமின்னே 36 (53) ரன்களில் அவுட் ஆனார். விக்கெட்டை பறிகொடுக்காமல் ஆடிய தனுஷ்கா அபார சதம் அடித்தார். அடுத்தடுத்து வந்த இலங்கை வீரர்கள் விக்கெட்டை இழக்க, இறுதி நேரத்தில் வந்த கீப்பர் தசுன் ஷானகா 24 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். நிலைத்து ஆடிய தனுஷ்கா 133 (134) ரன்களில் ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலங்கை அணி 297 ரன்கள் குவித்தது.