ரூட், பட்லர் சதம் வீண்: இங்கிலாந்தை போராடி வென்றது பாகிஸ்தான்!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று நடந்த லீக் போட்டியில் 14 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணியை தோற்கடித்தது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 6வது லீக் போட்டியில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான இமாம் உல் ஹக் மற்றும் ஃபகார் ஜமான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தினர். அணியின் ஸ்கோர் 82 ஆக இருந்த போது, 36 ரன் எடுத்திருந்த ஜமான் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பாபர் ஆஸமுடன் இணைந்து ஆடிய இமாம், 44 ரன்னில் அவுட் ஆனார்.
அதன் பின் ஹபீஸ் வந்தார். அரை சதம் அடித்த பாபர், 63 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய ஹபீஸ், 62 பந்துகளில் 84 ரன் சேர்த்து பெவிலியன் திரும்பினார். பின்னர் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது வந்தார். அவர் 55 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளையும் மார்க் வுட் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இதையடுத்து 349 என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில், தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 8 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்த ஜோ ரூட், நிதானமாக பேட்டிங் செய்தார். ஆனால் பேர்ஸ்டோவ் 32 ரன்னிலும், கேப்டன் இயான் மோர்கன் 9 ரன்னிலும் ஆட்டமிழக்க, அடுத்த வந்த பென் ஸ்டோக்ஸும் நிலைத்து நிற்கவில்லை. அவர் 13 ரன்னில் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி தடுமாறியது.
அதன்பின், ஜோ ரூட்டுடன் கீப்பர் பட்லர் ஜோடி சேர்ந்தார். 47 பந்தில் அரை சதம் அடித்த ரூட், 97 பந்தில் சதம் அடித்தார். அவர் 107 ரன் எடுத்திருந்தபோது, ஷதாப் கான் பந்துவீச்சில் ஹபீஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அனல் பறக்க ஆடிய பட்லர் 75 பந்தில் சதம் அடித்தார். அவர் களத்தில் நிற்கும் வரை இங்கிலாந்து அணி வென்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முகமது ஆமிர் பந்துவீச்சில், 103 ரன்னில் அவர் அவுட் ஆக, ஆட்டத்தின் போக்கு மாறியது. அடுத்து வந்தவர்களில் வோக்ஸ் மட்டும் 21 ரன் எடுத்தார். மற்றவர்கள் நிலைக்கவில்லை.
50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 334 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 14 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.