இந்திய தேசிய கீதத்தை பாடியது ஏன்? பாக்.ரசிகர் விளக்கம்
ஆசியக் கோப்பைத் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய தேசிய கீதத்தை பாடியது ஏன் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கூறியுள்ளார்.
ஆசியக் கோப்பைப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி கடந்த 19 ஆம் தேதி நடந்தது. அப்போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், தனது தோளில் பாகிஸ்தான் தேசியக் கொடியை போர்த்திக் கொண்டு, இந்திய தேசிய கீதம் இசைக்கும்போது மரியாதையோடு பாடிய வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த இரு நாட்டு ரசிகர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
இந்நிலையில் அந்த ரசிகர் அடில் தாஜ் என்பது தெரிய வந்துள்ளது. அவர் கூறும்போது, ’எனது அருகில் இருந்த சில இந்திய ரசிகர்கள், எங்கள் நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செய்ததைப் பார்த்தேன். இதையடுத்து நானும் இந்திய தேசிய கீதத்துக்கு மரியாதை செய்தேன். இருநாட்டு அமைதிக்கும் இது ஒரு சிறு முயற்சி. நாளை (இன்று) நடக்கும் இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கு இரண்டு நாடுகளின் தேசிய கொடிகளையும் கொண்டு வர இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.