மகிழ்ச்சி தந்த தோனியின் விக்கெட்: பாக்.பந்துவீச்சாளர் சிலிர்ப்பு!
தோனியின் விக்கெட்டை வீழ்த்தியது மறக்க முடியாத மகிழ்ச்சியை தந்துள்ளது என்று பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, ‘சிறு வயதாக இருக்கும்போதே வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸின் பந்துவீச்சைப் பார்த்து ரசிப்பேன். அவரது பந்துவீச்சுக்கு எனது ரோல் மாடல். களத்தில் அவரது ஆக்ரோஷம் என்னை கவர்ந்தது. அவர் வீசும் யார்க்கர் மிரட்டலாக இருக்கும். அதைப் பார்த்து பந்துவீச்சாளர் ஆகி அதிக விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று முடிவு செய்தேன். விக்கெட்டை வீழ்த்தியதும் அதை எப்படி கொண்டாடுவாரோ, அப்படியே நானும் கொண்டாடுகிறேன். சாம்பியன்ஸ் கோப்பையை பாகிஸ்தான் வென்றது பற்றி கேட்கிறீர்கள்.
பைனல் போட்டிக்கு முன், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 24 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். அந்தப் போட்டியில் தான் நான் முதன்முதலாக மேன் ஆப் த மேட்ச் விருதை பெற்றேன். அடுத்து நடத்த பைனலில் தோனியின் விக்கெட்டை வீழ்த்தினேன். அவர் சிறந்த பேட்ஸ்மேன். ஆட்டத்தை வெற்றியுடன் முடித்து வைப்பதில் கில்லாடி. அவர் விக்கெட்டை வீழ்த்தியது எனக்கு மகிச்சியான ஒன்று.
முகமது ஆமிருடன் பந்துவீசுவது பற்றி கேட்கிறார்கள். அவர் நட்சத்திர பந்துவீச்சாளர். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, ’ஆமிரின் பந்துவீச்சை எதிர்கொள்வது கடினம்’ என்று கூறியிருக்கிறார். ஒரு டாப் பேட்ஸ்மேனே அப்படிச் சொல்லும்போது அவருடன் பந்துவீசுவது எனக்கும் பெருமையான விஷயம்தான்’ என்றார்.