மைதானத்திலேயே கதறி அழுத ஷதாப் கான்.. விமர்சனங்களால் துளைக்கப்படும் பாக். அணி!

மைதானத்திலேயே கதறி அழுத ஷதாப் கான்.. விமர்சனங்களால் துளைக்கப்படும் பாக். அணி!

மைதானத்திலேயே கதறி அழுத ஷதாப் கான்.. விமர்சனங்களால் துளைக்கப்படும் பாக். அணி!
Published on

பாகிஸ்தான் அணிக்கு மறக்க முடியாத நாள்!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தோல்வியானது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக மாறிவிட்டது. டி20 கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியை தழுவியதை பாகிஸ்தான் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தோல்வி சில பந்துகளுக்கு முன்பே தெரிந்திருந்தால் கூட இந்த அளவிற்கு கடுப்பாகி இருக்கமாட்டார்கள். ஆட்டத்தின் கடைசி பந்துவரை பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தது. இறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் அந்த அணியை ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்களும் வறுத்தெடுத்து வருகிறார்கள். அதேபோல், இலக்கு அதிகமாக இருந்திருந்தால் கூட பரவாயில்லை, வெறும் 131 ரன்களை அடிக்க முடியவில்லையே என்று பலரும் விமர்சன கணைகளை தொடுத்து வருகிறார்கள்.

பாபர் அசாம் மீது அக்ரம் காட்டம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், கேப்டன் பாபர் அசாமை கடுமையாக விமர்சித்துள்ளார். அணியை தேர்வு செய்வதில் அசாம் கோட்டை விட்டுவிட்டதாக கூறியுள்ள அவர், சோயிப் மாலிக்கை தேர்வு செய்யாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மிகவும் அனுபவம் வாய்ந்த வீரரான சோயிப் மாலிக் மிடில் ஆர்டரில் விளையாடினால் அணிக்கு பலமாக இருக்கும் என்றும், ஆஸ்திரேலிய மண்ணில் அவரது ரன் ரேட் குறித்து யாராவது அவரிடம் தெரிவித்திருக்க வேண்டும் என்றும் அக்ரம் கூறியுள்ளார்.

நான் கடும் கோபத்தில் இருக்கிறேன் - அக்தர்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், பாபர் அசாமின் கேப்டன்சியை கடுமையாக சாடியுள்ளார். பாபர் அசாமின் கேப்டன்சி மிகவும் மோசமாக இருந்ததாகவும், தன்னுடைய வீரர்களிடம் இருந்து முழு பலத்தை வெளிப்படுத்த அவர் தவறிவிட்டதாகவும் அக்தர் விமர்சனங்களை முன்வைத்தார். தான் மிகுந்த கோபத்தில் உள்ளதாகவும், தன்னால் மேற்கொண்டு பாகிஸ்தான் அணி செய்த மோசமான விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்றும் அவர் காட்டமாக வீடியோ ஒன்றில் பேசியிருந்தார்.

பாக். கிரிக்கெட் வாரிய தலைவரும் தப்பிக்கவில்லை!

பாகிஸ்தான் வீரர்கள் மீதான விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரான ரமீஸ் ராஜா மீதும் விமர்சனங்கள் குவியத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது அமீர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், “தொடக்கத்தில் இருந்தே நான் சொல்லி வருகிறேன். வீரர்கள் தேர்வு மிகவும் மோகமாக உள்ளது என்று. யார் அதற்கு பொறுப்பேற்பது?. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், தேர்வுக் குழு தலைவரும் தங்களது பதவியை விட்டு விலக வேண்டிய நேரம் இது” என்று காட்டமாக கூறியுள்ளார்.

மைதானத்தில் கதறி அழுத ஷதாப் கான்!

இதனிடையே, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்ற நிலையில், அந்த அணியின் வீரர் ஷதாப் கான் மைதானத்திலேயே கதறி அழுதார். அவர் அழுத காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ஷதாப் கான் நேற்றையப் போட்டியில் 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்தார். அந்த வீடியோவில் ஷபாப் கான் முட்டிக்கால் போட்டு தலையை தரையில் வைத்து அழுது கொண்டிருக்க நிர்வாகி ஒருவர் அவரை தேற்றுகிறார். பின்னர் அவரே எழுந்து உள்ளே சென்றுவிடுகிறார்.

மீண்டு வருமா பாகிஸ்தான் அணி?

இந்திய அணிக்கு எதிரான போட்டியை தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததன் மூலம் குரூப் 2 பிரிவில் 5-வது இடத்திற்கு சென்றுவிட்டது. அரையிறுதி சுற்றுக்கு பாகிஸ்தான் அணி செல்வது தற்போது மிகவும் சவாலான ஒன்றாக மாறிவிட்டது. இருப்பினும் பாகிஸ்தான் அணி மீண்டு வந்து அடுத்தடுத்தப் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். பாகிஸ்தான் அணி என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com