’’உண்மை கசக்கும்’’: அணியில் இருந்து நீக்கப்பட்ட பாக். வீரரின் கோப ட்வீட்!
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டதால் கோபமான வேகப்பந்துவீச்சாளர் ஜுனைத் கான், தனது வாயை கட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வரும் 30-ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியலை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள், ஏற்கனவே அறிவித்து விட்டன. அந்த வீரர்கள் பட்டியலில் 23- ஆம் தேதி வரை மாற்றங்கள் செய்யலாம். அதன்படி பாகிஸ்தான் வீரர்கள் சிலர் மாற்றப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி 0-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதையடுத்து, உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் அந்நாட்டு தேர்வு குழு மாற்றம் செய்துள்ளது. அதன்படி, 33 வயது இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் வஹாப் ரியாஸ், முகமது ஆமிர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆசிப் அலி ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சேர்க்கப்பட்டதால், உத்தேச அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான், ஆல்-ரவுண்டர் பஹீம் அஷ்ரப், அபித் அலி நீக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜூனைத் கான், தனது வாயை பிளாஸ்திரியால் ஒட்டி, புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ’’நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. உண்மை எப்போதும் கசக்கும்’’ என்று கூறியுள்ளார். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். இதையடுத்து அந்த ட்வீட்டை அவர் நீக்கிவிட்டார்.