பாக்.கிரிக்கெட் வீரர்கள் மோதல்: விசாரிக்கக் குழு
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தை விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அமைத்துள்ளது.
பாகிஸ்தானில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டி சமீபத்தில் ராவல்பிண்டியில் நடந்தது. சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களுக்கான போட்டி அது. பஞ்சாப் கேப்டன் உமர் அக்மல், கிரிக்கெட் வீரர் ஜுனைத் கானுக்கு பதிலாக இன்றைய போட்டியில் நஸிர் விளையாடுவார் என்று முதலில் சக வீரர்களிடம் கூறினாராம்.
பின்னர், அளித்த பேட்டியில், ’மைதானத்தில் சென்றுகொண்டிருக்கும்போது பார்த்தால் திடீரென்று ஜுனைத் கானை காணவில்லை. எனக்கு வியப்பாக இருந்தது. பிறகு மானேஜரும் கோச்சும் அவர் இன்று விளையாட மாட்டார் என்று சொன்னார்கள். ஒரு கேப்டனாக எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தது’ என்று கூறியிருந்தார்.
இதைக் கண்டு கொதித்த ஜூனைத் கான், ‘உமர் இப்படி சொன்னது ஏமாற்றமளிக்கிறது. நான் ஏதோ மைதானத்தில் இருந்து ஓடிவிட்டதுபோல அவர் கூறியிருக்கிறார். உணவு விஷமாக மாறிவிட்டதால் நிர்வாகத்திடம் சொன்னேன். அவர்கள் ஆட வேண்டாம் என்றனர். டாக்டர்களும் ஓய்வெடுக்கச் சொன்னதால் ஆடவில்லை. ஆனால் உமர் இது தெரியாதது போல பேசியிருப்பது ஏமாற்றமாக இருக்கிறது’ என்று கூறியிருந்தார்.
இந்தச் சண்டையை விசாரிக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மூன்றுபேர் குழுவை நியமித்திருக்கிறது.