12வது ஐபிஎல்: 14 நாடுகளில் இருந்து 1003 வீரர்கள் பதிவு!

12வது ஐபிஎல்: 14 நாடுகளில் இருந்து 1003 வீரர்கள் பதிவு!
12வது ஐபிஎல்: 14 நாடுகளில் இருந்து 1003 வீரர்கள் பதிவு!

12 வது ஐபிஎல் போட்டியில் பங்குபெற 14 நாடுகளைச் சேர்ந்த 1003 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

ஐபிஎல் எனப்படும் இந்திய பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் 2008 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் வெளிநாட்டு வீரர்களும் பங்குபெற்று விளையாடி வருகிறார்கள். இந்த தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் மூலம் எடுக்கப்படுவதால், சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு கோடிகளில் ரூபாய் கொட்டுகிறது.

இந்நிலையில் 2019-ம் வருடத்துக்கான ஐபிஎல் ஏலம் ஜெய்ப்பூரில் வரும் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த 12 வது ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் 50 இந்திய வீரர்கள், 20 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 70 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட இருக்கின்றனர்.

ஆனால் இதில் பங்குபெற 14 நாடுகளைச் சேர்ந்த 1003 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் ஹாங்காங், நெதர்லேண்ட், அமெரிக்காவில் இருந்தும் தலா ஒரு வீரர் பதிவு செய்துள்ளனர். தென்னாப்பிரிக்காவில் இருந்து அதிகப்பட்சமாக 59 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். 

இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அமிதாப் சவுதாரி கூறும்போது, ‘771 இந்திய வீரர்களும் 232 வெளிநாட்டு வீரர்களும் பதிவு செய்துள்ளனர். ஆனால், மொத்தமுள்ள 8 அணிக்கும் சேர்த்து 70 வீரர்கள் மட்டுமே தேவை. அடுத்த வாரம் பைனல் லிஸ்ட் ரெடியாகிவிடும்’ என்றார். 

கடந்த 11 வருடமாக ஐபிஎல் ஏலத்தை நடத்தி வந்த ரிச்சர்ட் மேட்லி இந்த முறை  நடத்தவில்லை. ஹக் எட்மீட்ஸ் என்பவர் இந்த வருட ஏலத்தை நடத்த இருக்கிறார். ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்கள் குறித்த விவரங்களை 10 ஆம் தேதிக்குள் கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

ஐபிஎல் நடக்க இருக்கும் நேரத்தில் பொது தேர்தல் நடைபெற இருப்பதால், போட்டி இந்தியாவில் நடக்குமா, வெளிநாட்டில் நடக்குமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com