சிஎஸ்கே-வுடன் வெற்றி: பந்துவீச்சாளர்களை புகழும் தினேஷ் கார்த்திக்!
’எங்கள் பந்துவீச்சாளர்கள் இந்தப் போட்டியில் நம்பிக்கையுடன் வீசியதால் வெற்றி பெற்றோம்’ என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் சொன்னார்.
பதினோறாவது ஐபி்எல் தொடரில் நேற்று நடந்த 33 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. சென்னை அணியில் மாற்றங்கள் இல்லை. கடந்தப் போட்டியில் பங்கேற்றவர்களே இதிலும் பங்கேற்றார்கள். கொல்கத்தா அணியில் காயமடைந்த நிதிஷ் ராணாவுக்கு பதில் ரிங்கு சிங் சேர்க்கப்பட்டிருந்தார். டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் தோனி ஆட்டமிழக்காமல் 43 ரன்களும், ஷேன் வாட்சன் 36 ரன்களும் எடுத்தனர். பியுஷ் சாவ்லா, சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
178 ரன்கள் என்ற வெற்றி இலக்கை கொல்கத்தா அணி, 18 ஆவது ஓவரிலேயே எட்டியது. சிறப்பான ஆட்டத்தை சுப்மன் கில் 36 பந்துகளில் 57 ரன்களும், தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில் 45 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வெற்றிக்குப் பின் பேசிய கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், ‘எங்கள் அணி நிர்வாகம் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களை அதிகம் சேர்த்திருக்கிறது. அதற்கு அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். சுப்மன் கில் அப்படி வந்தவர்தான். கடந்த சில போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் இந்த போட்டியில் நன்றாக விளையாடினார். எந்த அழுத்தமும் இல்லாமல் ஆடினார். எங்கள் பந்துவீச்சாளர்கள் இந்தப் போட்டியில் நம்பிக்கையுடன் வீசினார்கள். இதன் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்ததில் மகிழ்ச்சி. போட்டியை நாங்கள் கடைசிவரை கொண்டு செல்லாமல் விரைவாக முடித்துவிட்டோம். சுனில் நரேன், ஒரு முழுமையான வீரர். பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார்’ என்றார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற சுனில் நரேன் கூறும்போது, ‘பந்துவீச்சில் இன்று சிறப்பாக செயல்பட்டேன். அதுதான் என்னை இந்தளவுக்கு கொண்டு வந்தது. பேட்டிங்கிலும் எனது பங்களிப்பு உதவியாக இருந்ததில் மகிழ்ச்சி. எனது ஷாட்களை தேர்ந்தெடுத்து விளையாடினேன். என்ன நடந்தாலும் அணி நிர்வாகம் எனக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறது. இந்த வெற்றி ஒட்டுமொத்த அணியின் முயற்சியால் கிடைத்தது’ என்றார்.