முதல்ல, அவருக்கு, அடுத்து இவருக்கு... அடுத்தடுத்து மாறிய ’ஆரஞ்சு’!
ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் குவிக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் ’ஆரஞ்சு நிறத் தொப்பி’ நேற்று அடுத்தடுத்த மாறிய சம்பவம் சுவராஸ்யமாக அமைந்தது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நேற்று மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் அபாரமாக ஆடி, 30 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய சென்னை அணி, ராயுடு மற்றும் தோனியின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பெற்றது. ராயுடு, 53 பந்துகளில் 82 ரன்களும் தோனி, 34 பந்துகளில் 70 ரன்களும் விளாசினர்.
முதல் இன்னிங்ஸில் பெங்களூர் அணியின் ஆட்டம் முடிந்ததும் அதிக ரன்கள் குவித்த டிவில்லியர்ஸுக்கு ஆரஞ்சு நிறத் தொப்பி வழங்கப் பட்டது. அவர் இந்த தொடரில் இதுவரை (நேற்று வரை) 280 ரன்கள் குவித்துள்ளார். அதை அணிந்து கொண்டு பீல்டிங் செய்தார். ஆனால் போட்டி முடிந்ததும் அந்த தொப்பி ராயுடு வசமானது. அவர் டிவில்லியர்ஸ்சை விட 3 ரன்கள் அதிகம் பெற்றதால் இந்த மியூசிக்கல் சேர் ஆட்டம் நடந்தது. அவர் 283 ரன்கள் எடுத்துள்ளார்.
ஒரே போட்டியின் போது, ஆரஞ்சு நிறத் தொப்பி அங்கும் இங்கும் மாறியது, சுவாரஸ்யமாக இருந்தது.