ஆன்லைன் சூதாட்டம்... விராட்கோலி,  தமன்னா மீது  தமிழக டிஜிபியிடம் புகார்

ஆன்லைன் சூதாட்டம்... விராட்கோலி, தமன்னா மீது தமிழக டிஜிபியிடம் புகார்

ஆன்லைன் சூதாட்டம்... விராட்கோலி, தமன்னா மீது தமிழக டிஜிபியிடம் புகார்
Published on

ரம்மி, ஆன்லைன் சூதாட்டத்தை தமிழகத்தில் தடை செய்யக் கோரியும், அது தொடர்பான விளம்பரங்களில் நடிக்கும் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட்கோலி, நடிகை தமன்னா மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வைகுண்டர் மக்கள் கட்சி சார்பில் தமிழக டிஜிபியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் அளிக்கப்பட்டுள்ள இந்த புகாரில், "தமிழகத்தில் ரம்மி, ஒரு நம்பர் லாட்டரி, மூன்று நம்பர் லாட்டரி போன்ற சூதாட்டங்களால் பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு தடை செய்துள்ளது. ஆனால் சில மாதங்களாக மொபைல் பிரிமியர் லீக் என்ற ஆன்லைன் மூலம் ரம்மி மற்றும் 30-க்கும் மேற்பட்ட சூதாட்டங்கள் அறிமுகமாகி நடந்து வருகிறது.

<
இந்த சூதாட்ட விளம்பரங்களில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி மற்றும் நடிகை தமன்னா ஆகியோர் பணத்திற்காக நடித்து அதனை பிரபலப்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த சூதாட்டங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது. இந்த மொபைல் சூதாட்டம் மூலம் தினமும் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் என நம்பி அதிக அளவில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் முதல் வயதான பெரியவர்கள் வரை விளையாடி தங்களது பொருளாதாரத்தை மிக பெரிய அளவில் இழந்து வருகிறார்கள்.

பொருளாதாரத்தை இழந்த பலர் மனநலம் பாதிக்கப்பட்டும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தும், தங்களது தொழிலையும் குடும்பத்தை விட்டு ஓடி விடக்கூடிய நிலையில் உள்ளனர். மூன்று நாள்களுக்கு முன்பு இந்த சூதாட்டத்தால் பணத்தை இழந்த சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் கோடிக்கணக்கான மக்கள் வீட்டில் ஓய்வில் இருப்பதால் முன்பை விட அதிக அளவில் சமூகத்தில் மிகப்பெரிய பாதிப்பை இந்த ஆன்லைன் சூதாட்டம் ஏற்படுத்தி வருகிறது. ஆகவே இந்த சூதாட்ட அரக்கனின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் அப்பாவி பொதுமக்களை காப்பாற்ற மொபைல் பிரிமியர் லீக் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் அனைத்து ஆன்லைன் சூதாட்டங்களையும் தமிழகத்தில் தடை செய்ய வேண்டும்.
மேலும் மக்கள் அதிக அளவு ஏமாற காரணமாக இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மீதும் சினிமா நடிகை தமன்னா மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com