சதம் அடித்த வெங்காய விலை ! வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடிவு
வெங்காய விலை கிடு-கிடு உயர்வு காரணமாக, அதனை விரைந்து இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெங்காயம் விலை கிடு-கிடுவென உயர்ந்து சில இடங்களில் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு வரை விற்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் 80 ரூபாய்க்கு குறைவாக வெங்காயம் கிடைப்பதில்லை என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலையும் 40 சதவீதம் வரை உயர்ந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியின் மிகப் பெரிய காய்கறி சந்தையான ஆசாத்பூர் மண்டி உள்ளிட்ட சந்தைகளில் வரத்து குறைவாக இருப்பதுதான் விலை உயர்வுக்கு காரணம் என்பது வியாபாரிகள் சொல்லும் தகவல்.
வெங்காய விலை உயர்வு அனைவரையும் பாதிக்கும் என்பதாலும் அதிலும் ஏழை மக்களை மிகவும் அதிகம் பாதிக்கும் என்பதாலும், உடனடியாக வெங்காயத்தை இறக்குமதி செய்து அரசு அமைப்புகள் மூலம் நியாய விலையில் விற்பனை செய்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மூத்த அதிகாரிகள் ஆலோசனை செய்ததைத் தொடர்ந்து ஈரான், எகிப்து, துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு விரைவாக அந்த நாடுகளில் இருந்து வெங்காயத்தை இந்தியாவுக்கு அதிக அளவில் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதைத்தவிர, பதுக்கல்காரர்களை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அடுத்த சில வாரங்களில் வெங்காயம் வரத்து அதிகரிக்கும் என்றும் அதன் காரணமாக விலை அந்த சமயத்தில் குறையத் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தகவல் அளித்துள்ளார்கள். ஆகவே இந்த பிரச்சனை குறுகிய கால பிரச்னையாக இருக்கும் என்றும் விரைந்து இறக்குமதி செய்வதன் மூலம் இந்தப் பிரச்சனையை தீர்க்கலாம் என்றும் அரசுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காய வரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க குழுக்கள் அனுப்பப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் விரைந்து அறுவடை செய்ய நடவடிக்கை எடுப்பதன் மூலமும், அத்துடன் 180 கன்டைனர் வெங்காயம் இறக்குமதி செய்வதன் மூலமும் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.