நான் விளையாடியதிலேயே கடினமானது ஜோகன்னஸ்பர்க் ஆடுகளம் தான் என்று இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா கூறினார்.
தென்னாப்பிரிக்க அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 187 ரன்களுக்கு சுருண்டது.
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க வீரர்களான ராகுல் ரன் எதுவும் எடுக்காமலும், முரளி விஜய் 8 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். புஜாரா 50 ரன்களிலும், கேப்டன் கோலி 54 ரன்களிலும் வெளியேறினார். ரஹானே 9 ரன்களிலும், பார்த்திவ் படேல் 2 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். புவனேஷ்வர் குமார் 30 ரன்கள் எடுத்தார்.
போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய புஜாரா, ‘இந்த பிட்ச்-சில் 187 ரன்கள் எடுத்ததே பெரிய விஷயம்தான். இது, மற்ற பிட்ச்-சில் 300 ரன்கள் எடுப்பதற்கு சமம். நான் விளையாடியதிலேயே கடினமான ஆடுகளம் இதுதான். ரன்கள் எடுக்க கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் நிதானமாக ஆடி, ரன்கள் எடுத்துள்ளோம். அதே போல தென்னாப்பிரிக்க வீரரின் விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளோம். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டால், இந்தப் போட்டியில் வெல்ல வாய்ப்பிருக்கிறது. அதன்படி இன்றைய நாள், நம் அணிக்கு சிறப்பான ஒன்று. நான் முதல் ரன்னை எடுத்ததும் ரசிகர்கள் கைதட்டியது பற்றி கேட்கிறீர்கள். நான் எத்தனை பந்துகளை சந்தித்தேன் என்பதை பார்க்கவில்லை. ரன் எடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். கடந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் ரன் அவுட் ஆனது துரதிர்ஷ்டமானது. டெஸ்ட் போட்டியில் ரன் அவுட் ஆவதை எந்த கிரிக்கெட் வீரரும் விரும்ப மாட்டார்கள். அதை மறந்துவிட்டு அடுத்த கட்டத்துக்கு வந்துவிட்டேன். இன்றைய (நேற்று) போட்டியில் ஆடிய விதம் மகிழ்ச்சியாக இருந்தது’ என்றார்.