'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் ! இந்தியாவை ஜெயிக்குமா ?

'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் ! இந்தியாவை ஜெயிக்குமா ?
'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் ! இந்தியாவை ஜெயிக்குமா ?

வெஸ்ட் இண்டீஸ், இந்த அணியின் பெயரை கேட்டாலே ஒரு காலத்தில் உலகில் உள்ள பல நாட்டு கிரிக்கெட் அணிகளுக்கு கை கால்கள் எல்லாம் நடுங்கும். ஆம், திணறடிக்கும் வேகப் பந்து வீச்சுக்கு பயப்படாதோர் எவரும் இல்லை. ஜோயல் கார்னர், மால்கம் மார்ஷல், இயான் பிஷப், வால்ஷ், ஆம்புரோஸ் என ஜாம்பவான்கள் இருந்த அணி வெஸ்ட் இண்டீஸ். அதேபோல பேட்டிங்கில் லாயட், ரிச்சர்ட்ஸ், லாரா, சந்திரபால், காளிச்சரன், டெஸ்மண்ட் ஹெயின்ஸ் என பலரும் இருந்தனர். 1975, 1979 என இரண்டு உலகக் கோப்பையை முதல் முறையாக தொடர்ச்சியாக வென்ற அணி வெஸ்ட் இண்டீஸ். இவர்களின் இந்தத் தொடர் வெற்றிக்கு முதல்முறையாக 1983 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் முற்றுப் புள்ளி வைத்தது, இந்திய அணிதான்.

ஆம், 1983 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து உலகக் கோப்பையை வென்றது இந்தியா. அதன், பின்பு வெஸ்ட் இண்டீஸ் அணியால் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை. இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கவுள்ளது. இந்தியா 1948 ஆம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையே 94 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா 18 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் 30 போட்டிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளது. 46 டெஸ்ட் போட்டிகள் சமனில் முடிந்துள்ளது.

மொத்தப் போட்டிகளில் 45 டெஸ்ட் இந்தியாவில் நடந்துள்ளது, அதிலும் 14 போட்டிகளை வெஸ்ட் இண்டீஸ் அணியும், 11 போட்டிகள் இந்தியாவும் ஜெயித்துள்ளது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் நிறைய வெற்றிகளை பெற்று இருந்தாலும். இதெல்லாம், 20 ஆண்டுகள் முன்பு வரைதான். கடந்த 20 ஆண்டுகளிலும் இந்தியாதான் வெஸ்ட் இண்டீஸ் அணியை பெரும்பாலும் வீழ்த்தியுள்ளது. 

1948 முதல் 1960 வரை !

இந்தக் காலக்கட்டத்தில் இந்தியாவிலும் சரி, தங்களது சொந்த நாட்டிலும் சரி வெஸ்ட் இண்டீஸ் அணியே வெற்றி கோலோச்சியுள்ளது. இந்தியா தனது முதல் டெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1948 - 1949 ஆம் ஆண்டு லாலா அமர்நாத் தலைமையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அதிலும் தோல்வி. பின்பு வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது அந்த அணிக்கு கேப்டனாக ஜான் குடார்ட் இருந்தார். அப்போது இந்திய அணியை சென்னை, மும்பை, கொல்கத்தாவில் வீழ்த்தி வெற்றி வாகையை சூடியது. இதேநிலை 1960 ஆவது ஆண்டு வரை தொடர்ந்தது. 1958 வரை வெஸ்ட் இண்டீஸ் அணியே வெற்றிப் பெற்றது. ஒரு சில போட்டியை இந்தியா டிரா செய்தது. ஆனால் வெற்றி வசமாகவில்லை.

1960 முதல் 1970 வரை !

அடுத்த 10 ஆண்டுகளும் இந்தியாவுக்கு தண்ணி காட்டியது வெஸ்ட் இண்டீஸ். இந்தப்  10 ஆண்டுகளில் இந்திய டெஸ்ட் அணிக்கு இரண்டு பேர் கேப்டன்களாக இருந்தனர். ஒருவர் நாரி காண்ட்ராக்டர் மற்றொருவர் மன்சூர் அலிகான் பட்டோடி. ஆனால் தோல்வி மாறவே இல்லை. சொந்த நாட்டிலும், வெஸ்ட் இண்டீஸிலும் தோல்வி... தோல்வி... தோல்வி மட்டுமே. அதுவம் 5 போட்டிகள் கொண்ட தொடரிலும் தோல்வியை தழுவியது இந்திய அணி. இதனையடுத்து இந்திய அணி தேர்வில் அதிரடி மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. அந்த மாற்றம் நன்மையை தந்தது. இந்திய டெஸ்ட் போட்டி வரலாற்றில் முதல் மாற்றம் நிகழ்ந்தது.

1970 முதல் 1980 வரை !

இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, அஜித் வட்கேர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப் பயணம் செய்தது, இந்தியா. மொத்தம் 5 போட்டிகளில் டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அதில் இரண்டாவது டெஸ்ட்டில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி. இதில் இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் பிரசன்னா, பிஷன் சிங் பேசி, வெங்கடராகவன் விக்கெட்டுகளை வீழ்த்தினர். சுனில் கவாஸ்கர் பேட்டிங்கில் கலக்கினார். இதன் காரணமாக அந்தத் தொடரையே இந்தியா வெற்றிக் கொண்டது. ஆனால், அதன் பின்பு சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸிடம் 3-2 என்றும், 1976 இல் 2-1 என்றும் இந்தியா தோற்றது. அதன் பின்பு 1978 இல் இந்தியா வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.

1980 முதல் 1990 வரை ! 

இந்த 10 ஆண்டுகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய கிரிக்கெட்டை அடக்க ஆண்டது. 1982 இல் 2-0, 1983 இல் 3-0, 1987 தொடரை சமன் செய்தும் பின்பு 1988 இல் 3-0 என்றும் தோல்வியை தழுவியது இந்திய அணி. 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை சாம்பியன் ஆன பின்பும் தோல்விகளை பெற்றது இந்திய அணியை அப்போதைய ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தது. அன்றைய காலக்கட்டத்தில் கபில் தேவ், சுனில் கவாஸ்கர் என இந்திய அணியின் தலைமை பொறுப்பு மாறிக்கொண்டே இருந்தது. ஆனால் தோல்வி முகம் தொடர்ந்தது. இதன் பின்பு மீண்டும் இந்திய அணியில் மாற்றம் ஏற்பட்டகு.

1990 முதல் 2002 வரை !

1990-களுக்கு பின்பு இந்திய அணியில் இளைஞர்கள் புகுந்தனர், முகமது அசாருதின் கேப்டன் பொறுப்பை ஏற்றார், இதன் பின்பு 1994 இல் அசாருதின் தலைமையிலான அணி, வெஸ்ட் இண்டீஸ்க்கு பயணம் செய்து டெஸ்ட் போட்டியை 1-1 என்ற கணக்கில் டிரா செய்யப்பட்டது. பின்பு 1996 ஆம் ஆண்டு சச்சின் தலைமையிலான அணி 1-0 என்ற கணக்கில் தோல்வியை கண்டது. 2002 இல் கார்ல் ஹூப்பர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் போட்டியில் தோல்வி கண்டாலும், இறுதியில் 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. அப்போது இந்திய அணிக்கு சவுரவ் கங்குலி தலைமை ஏற்றார்.

2002 - 2018 வரை இந்தியாவின் ஆதிக்கம் !

கடந்த 16 ஆண்டுகளில் இந்தியா ஒட்டுமொத்தமாக வெஸ்ட் இண்டீஸ் அணியை ஆதிக்கம் செலுத்தியது. கார்ல் ஹூப்பர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை சொந்த மண்ணில் 24 ஆண்டுகளுக்கு பின் விழ்த்தியது கங்குலி தலைமையிலான இந்திய இளம் படை. அதன் பின்பு ராகுல் திராவிட் தலைமையிலான அணி 2004 இல் வெற்றிப் பெற்றது. அடுத்தடுத்து தோனி தலைமையிலான அணி 2011 மற்றும் 2013 ஆம் ஆண்டில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது. கடைசியாக 2016 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான அணியும் வெஸ்ட் இண்டீசை வெற்றிக் கண்டது. இந்த 16 ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 6 தொடர்களை இந்தியா கைப்பற்றியது. மேலும் 2002 இல் இருந்து இந்தியா 19 போட்டிகளில் வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்டு 10 வெற்றிகளை பெற்றுள்ளது. இதில் ஒரு தோல்வியை கூட இந்தியா பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com