ரசிகர்களை உறைய வைத்த ரன் அவுட் - 2 இன்ச் இடைவெளியினால் தனக்கு தானே முடிவுரை எழுதிய தோனி!

ரசிகர்களை உறைய வைத்த ரன் அவுட் - 2 இன்ச் இடைவெளியினால் தனக்கு தானே முடிவுரை எழுதிய தோனி!
ரசிகர்களை உறைய வைத்த ரன் அவுட் - 2 இன்ச் இடைவெளியினால் தனக்கு தானே முடிவுரை எழுதிய தோனி!

கால சக்கரத்தை இரண்டு ஆண்டுகள் பின்னோக்கி இதே ஜூலை 9 ஆம் தேதிக்கு சுழற்றினால் அது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கசப்பானதொரு நாள். 2019 உலக கோப்பை அரையிறுதியில் வெறும் இரண்டு இன்ச் இடைவெளியை சரியான நேரத்தில் கடக்க முடியாததால் தனது சர்வதேச கிரிக்கெட் கரியருக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி முடிவுரை எழுதிய அந்த நாள் வரும். 

நியூசிலாந்துக்கு எதிரான அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற 240 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடங்கி மிடில் ஆர்டர் வரை ரன் குவிக்க தடுமாற 92 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. 

பின்னர் வந்த தோனி மற்றும் ஜடேஜா 116 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கடைசி இரண்டு ஓவரில் 31 ரன்கள் தேவைப்பட தோனி ஸ்ட்ரைக்கில் இருந்தார். அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த தோனி, மூன்றாவது பந்தில் 2 ரன்களை எடுக்க முயல மார்டின் கப்டிலின் அற்புதமான நேரடியான ஹிட்டால் அந்த இரண்டாவது ரன் ஓட முயன்ற போது அவுட்டாகி வெளியேறி இருப்பார். அவர் அவுட்டானதும் அவருடன் இந்தியாவின் உலக கோப்பை கனவும் அப்போது கலைந்து போனது. அந்த போட்டியில் அரை சதம் பதிவு செய்திருந்தார் தோனி. 

“நான் ஏன் டைவ் அடிக்கவில்லை என திரும்ப திரும்ப கேட்டுக் கொள்வதுண்டு. எனது முதல் போட்டியிலும் ரன் அவுட், இந்த போட்டியிலும் ரன் அவுட். அந்த இரண்டு இன்ச் இடைவெளியை கடக்க நான் டைவ் அடித்திருக்க வேண்டும் என எனக்குள் சொல்லிக் கொள்வது உண்டு” என ஒரு பேட்டியில் தோனி சொல்லி இருந்தார். 

தோனி மட்டும் அல்ல இந்திய அணியின் ரசிகர்கள் பலரையும் அந்த ரன் அவுட் பல நாட்கள் தூங்கவிடவில்லை என்றே சொல்லலாம். தோனியின் ரன் அவுட்டின் போது மூன்றாவது நடுவரின் ரியாக்சனை கவனித்திருந்தால் தெரியும் அது எவ்வளவு அதிர்ச்சியான ரன் அவுட் என்று. முடிந்துவிட்டது என்ற போட்டியை இறுதிவரை கொண்டு கடைசி நேரத்தில் தோனி ரன் அவுட் ஆனது ரசிகர்களை அன்று உறைய வைத்துவிட்டது. 

ஏன் இவ்வளவு நம்பிக்கை என்றால், எப்பொழுது நிதானமாக விளையாடும் தோனி கடைசி சில ஓவர்களில் தான் வான வேடிக்கை காட்டி இந்திய அணியை வெற்றி பெறச் செய்வார். அப்படிதான் அன்றும் எப்படியும் தோனி இந்திய அணியை வெற்றிபெற செய்துவிடுவார் என்ற நம்பிக்கை அவர் கிரீஸீல் இருக்கும் வரை இருந்தது. ஒரே ஓவரில் 20 ரன்களுக்கு மேல் கூட தோனி விளாசியிருக்கிறார். இப்படியான எல்லா நம்பிக்கையையும் அந்த இரண்டு இன்ச் இடைவெளி தகர்த்துவிட்டது. அது தோனியின் வாழ்க்கையையும் புரட்டி போட்டு விட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com