தென்னாப்பிரிக்க கிரிக்கெட்: ஸ்டெயினுக்கு பதில் ’இளம் வேகங்கள்’ சேர்ப்பு!
காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ள ஸ்டெயினுக்குப் பதிலாக, இளம் வீரர்கள் இரண்டு பேர் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றது. காயம் காரணமாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்த தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்கு திரும்பி இருந்தார். முதல் டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஓலிவியர், லுங்கி நிகிடி ஆகிய இளம் வேகப்பந்துவீச்சாளர்களை அந்த அணி சேர்த்துள்ளது.
ஒலிவியர் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். பங்களாதேஷுக்கு எதிராக கடந்த அக்டோபர் மாதம் நடந்த டெஸ்ட் போட்டியில் அவர் நான்கு இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
லுங்கி நிகிடி ஒரு வருடத்துக்கு முன் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அந்த டெஸ்ட்டில் 5 விக்கெட் வீழ்த்தினாலும் அணியில் நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து இப்போது அணிக்கு தேர்வாகியுள்ளார்.