நாளை 2வது ஒருநாள் போட்டி: சிக்கல்களை சரிசெய்யுமா இந்திய அணி?

நாளை 2வது ஒருநாள் போட்டி: சிக்கல்களை சரிசெய்யுமா இந்திய அணி?
நாளை 2வது ஒருநாள் போட்டி: சிக்கல்களை சரிசெய்யுமா இந்திய அணி?

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஹாமில்டனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றி இருந்த நிலையில், இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியைத் தழுவியது இந்திய அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அதுவும், முதலில் பேட்டிங் செய்து 347 ரன்கள் குவித்த போதும், நியூசிலாந்து அணியை இந்திய பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது சற்றே வருத்தமான விஷயமாக அமைந்தது.

இந்நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி நாளை காலை 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. முதல் போட்டியில் செய்த தவறுகளைச் சரிசெய்து கொண்டு இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இனி, இந்திய அணியின் பலத்தையும், மாற்ற வேண்டிய சில விஷயத்தையும் பார்க்கலாம்.

பேட்டிங்தான் இந்தியாவின் பலம்

இந்திய அணியைப் பொறுத்தவரை மிகப்பெரிய பலமாக இருந்து வருவது பேட்டிங்தான். அதுவும் சில நேரங்களில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பி விடுகிறார்கள். பேட்டிங்கில் ரோகித் சர்மா, விராட் கோலி இந்திய அணியில் தூண்களாக இருக்கின்றனர்.

தற்போது கே.எல்.ராகுலின் தொடர்ந்து வரும் பேட்டிங் ஃபார்ம் மிரட்டும் வகையில் உள்ளது. நான்காம் இடத்தில் தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் அசத்தலாக விளையாடி வருகிறார். ஜடேஜா அவ்வவ்போது பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ஒரு வேளை ஹர்திக் பாண்ட்யா மீண்டும் அணிக்கு திரும்பினால் மிடில் ஆர்டர் பிரச்னை சரியாக வாய்ப்புள்ளது.

பந்துவீச்சில் முன்னேற்றம் தேவை

பேட்டிங்கை தாண்டி பந்துவீச்சு மற்றும் பீல்டிங்தான் தொடர்ச்சியாக கவலைக்கிடமாக உள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரை பும்ரா மட்டுமே அதிக ரன்கள் விட்டுக்கொடுக்காமல் கட்டுக்கோப்பாக பந்துவீசி வருகிறார். முகமது சமி ரன்கள் கொடுத்தாலும் பல நேரங்களில் விக்கெட்டுகளை சாய்த்து விடுகிறார்.

இருப்பினும், தற்போது சுழற்பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக உள்ளது. எதிரணியை மிரட்டும் வகையில் இல்லை. முதல் ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் 84 ரன்களை வாரி வழங்கினார். அதேபோல், ஷர்துல் தாக்கூரும் 80 ரன்களை கொடுத்தார். அதனால், அடுத்த போட்டியில் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக சைனி அணிக்குள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. அதேபோல், குல்தீப் யாதவிற்குப் பதிலாக சாஹல் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

தொடர்ந்து சொதப்பும் பீல்டிங்

அதேபோல், இந்திய அணியில் பீல்டிங் தொடர்ந்து ஒரு பிரச்னையாகவே இருந்து வருகிறது. கேப்டன் விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் மிகவும் சிறப்பாக பீல்டிங் செய்து வருகிறார்கள். ஆனால், மற்றவர்கள் செய்யும் மோசமான பீல்டிங்கால் எதிரணி கொடுக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. சில நேரங்களில் சாதாரண கேட்சுகளை கூட வீரர்கள் விட்டுவிடுகின்றனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் இப்படிதான் பீல்டிங்கில் இந்திய வீரர்கள் சொதப்பி, பின்னர் அடுத்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றனர். ஆகவே, பீல்டிங்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்திய வீரர்கள் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதரும், வீரர்களின் மோசமான பீல்டிங் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com