இந்திய ஏ அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து ஏ அணி வீரர்கள் 6 பேரை அந்த அணி, தங்கள் அணியில் சேர்த்துள்ளது.
மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக, நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. முதலாவது ஒரு நாள் போட்டி வரும் 22 ஆம் தேதி மும்பையில் நடக்கிறது. அதற்கு முன்பாக நியூசிலாந்து அணி, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட இருக்கிறது.
இதற்காக கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் இந்திய ஏ அணியுடன் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து ’ஏ’ அணியின் இளம் வீரர்கள், கிளென் பிலிப், டோட் அஸ்லே, மாட் ஹென்றி, ஹென்றி நிக்கோல்ஸ், கோலின் முன்றோ, ஜார்ஜ் வொர்க்கர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
லண்டனில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக தோற்ற பிறகு ஒரு நாள் போட்டியில் விளையாடாமல் இருந்த நியூசிலாந்து அணி, அதற்கு பிறகு விளையாடும் ஒரு நாள் போட்டி என்பதால் இதில் வெல்ல போராடும் என்று தெரிகிறது.