கனடாவுக்கு பறந்தது பாஸ்போர்ட்: டெல்லி ஏர்போர்ட்டில் தவித்த என்.ஆர்.ஐ!
பாஸ்போர்ட் இருந்த தனது பையை, கனடா செல்லும் பயணி தவறுதலாக எடுத்துச் சென்றுவிட்டதால் டெல்லி விமான நிலையத்தில் வெளிநாட்டில் வாழும் இந்தியர் தவித்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.
லக்னோவை சேர்ந்தவர் சத்யேந்திர சிங். இப்போது பஹ்ரைனில் வசித்துவருகிறார். இவர் தனது பெற்றோரைப் பார்ப்பதற்காக, சமீபத்தில் லக்னோ வந்திருந்தார். பார்த்துவிட்டு பஹ்ரைன் திரும்புவதற்காக சனிக்கிழமை லக்னோ விமான நிலையம் வந்தார். அங்கிருந்து டெல்லி சென்று பஹ்ரைன் செல்வது அவர் திட்டம்.
சனிக்கிழமை மதியம் டெல்லி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். செக்யூரிட்டி செக்-கில் நீண்ட வரிசை. தனது பாஸ்போர்ட், பணம் உள்ளிட்டவற்றை வைத்திருந்த கைப் பையை, ஸ்கேன் பண்ணக் கொடுத்தார். வரிசை முடிந்து ஸ்கேன் பண்ணும் இடத்துக்கு வெளியே வந்து பையை தேடினால் மாயம். சிங்கிற்கு, திக். என்ன செய்வதென்று தெரியவில்லை.
பாஸ்போர்ட் இல்லாமல் விமானத்தின் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள். விமான நிலைய பாதுகாப்புப் படையினரிடம் சொன்னார். அவர்கள் சிசிடிவி கேமராவில் பார்த்தனர். அப்போதுதான் கனடாவைச் சேர்ந்த பயணி ஒருவர், தவறுதலாக அந்தப் பையை தூக்கிக்கொண்டு செல்வது தெரிந்தது. அவர் செல்ல வேண்டிய ’ஏர்- கனடா’ விமானம் போய்விட்டது.
சிங்கிற்கு மேலும் அதிர்ச்சி. அவரிடம் பணமும் இல்லை. பாஸ்போர்ட்டும் இல்லை. பிறகு அங்கேயே இரவு முழுவதும் அவர் தங்க வைக்கப்பட்டார். செக்யூரிட்டி செக் முடிந்துவிட்டதால் அவரை வெளியே விட பாதுகாப்புப் படையினர் மறுத்துவிட்டனர். அவரிடம் வேறு உடையும் இல்லை.
‘எனது உறவினர்களுக்கு ஃபோன் செய்து நிலைமையை சொன்னேன். பணம் கொடுத்தனுப்புவதாகக் கூறினார்கள். ஆனால் அவர்கள் என்னை தொடர்பு கொள்ள வழியில்லாமல் போய்விட்டது. ஞாயிற்றுக்கிழமை ஏர்- இந்தியா நிறுவனம் அவர்கள் ’லாஞ்ச்’-சில் தங்க வைத்தது. இதற்குள் அந்த கனடா பயணியை பிடித்து அவர் பாஸ்போர்ட்டை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடும் முயற்சிக்குப் பின், நேற்று மாலை வந்து சேர்ந்தது அவர் பாஸ்போர்ட்’ என்றார் சிங்.