”ஆசியாவிற்குச் செல்ல இதுவே சரியான நேரம்” சவுதி அணிக்கு ஒப்பந்தமாகியுள்ள ரொனால்டோ!

”ஆசியாவிற்குச் செல்ல இதுவே சரியான நேரம்” சவுதி அணிக்கு ஒப்பந்தமாகியுள்ள ரொனால்டோ!
”ஆசியாவிற்குச் செல்ல இதுவே சரியான நேரம்” சவுதி அணிக்கு ஒப்பந்தமாகியுள்ள ரொனால்டோ!

சவூதி அரேபிய அல் நாசர் கிளப் அணியில் விளையாட ஒப்பந்தமாகியுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரசிகர்களின் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தள்ளார்.

போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணிக்காக ஒப்பந்தமாகி விளையாடி வந்தார். இந்நிலையில், தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர் எரிக் டென் ஹாக் ஆகியோரை கிண்டல் செய்ததை அடுத்து அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

இதையடுத்து கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அந்த அணியின் பயிற்சியாளர் பர்னாண்டோ சாண்டோஸ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக, ரொனால்டோ பெஞ்ச்-ல் அமர வைக்கப்பட்டார். இதையடுத்து அந்த அணி காலிறுதி போட்டியில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

இதைத் தொடர்ந்து கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இருந்து முன்கூட்டியே வெளியேறினாலும் போர்ச்சுகல் அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று ரொனால்டோ தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது 37 வயதான ரொனால்டோ, 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடரில் விளையாட வாய்ப்பில்லை என்று கால்பந்து விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவின் அல் நாசர் கிளப் அணிக்காக இரண்டரை ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்திவந்த ரொனால்டே இனி ஆசியாவில் விளையாடத் தொடங்கியுள்ளார்.

சவுதி லீக்கில் விளையாடி வரும் அல் நாசர் கிளப், இன்று (டிச.,31) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ரொனால்டோ தங்கள் அணிக்கு கையெழுத்திட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இவர், 2025 ஆம் ஆண்டு கோடை வரை இரண்டரை ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.

ஆனால், எவ்வளவு தொகைக்கு ரொனால்டோ ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவலை அல் நாசர் கிளப் வெளியிடவில்லை என்றாலும், ரொனால்டோவின் ஒப்பந்தம் '200 மில்லியன் யூரோக்களுக்கு (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.17,752 கோடி)' இருக்கும் என்று செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது.

ரொனால்டோவின் இணைவு சவுதி அரேபிய கிளப்பை அணியை மேம்படுத்தும் என்றும், ஒன்பதாவது முறையாக சவுதி புரோ லீக் பட்டங்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக 2019 இல் லீக் பட்டத்தை வென்ற அல் நாசர், முதல் முறையாக AFC சாம்பியன்ஸ் லீக்கை வெல்லும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது.

ஆசிய அணிக்கு செல்லும் ரொனால்டோ

அல் நாசர் கிளப் அணிக்கு கையெழுத்திட்டுள்ள தனது முடிவைப் பற்றி பேசிய ரொனால்டோ, "ஆசியாவிற்கு செல்ல இது சரியான நேரம். 'ஐரோப்பிய கால்பந்தில் நான் நினைத்த அனைத்தையும் வென்றது எனக்கு அதிர்ஷ்டம், ஆசியாவில் எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இதுவே சரியான தருணம் என்று இப்போது உணர்கிறேன். எனது புதிய அணி வீரர்களுடன் இணையும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். அவர்களுடன் இணைந்து அணி வெற்றிபெற உதவியாக இருப்பேன்.” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com