கிரியோஸின் சேட்டைகளை வென்ற ஜோக்கோவிச்சின் நிதானம் - 21வது கிராண்ட்ஸ்லாம் வெற்றி!

கிரியோஸின் சேட்டைகளை வென்ற ஜோக்கோவிச்சின் நிதானம் - 21வது கிராண்ட்ஸ்லாம் வெற்றி!
கிரியோஸின் சேட்டைகளை வென்ற ஜோக்கோவிச்சின் நிதானம் - 21வது கிராண்ட்ஸ்லாம் வெற்றி!

விம்பிள்டன் க்ராண்ட் ஸ்லாம் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடந்திருந்தது. இந்த இறுதிப்போட்டியை செர்பிய வீரரான ஜோக்கோவிச் வென்றிருக்கிறார். ஜோக்கோவிச்சின் கரியரில் அவர் வெல்லும் 21 வது க்ராண்ட்ஸ்லாம் இது. விம்பிள்டனை மட்டும் 7 வது முறையாக வென்றிருக்கிறார்.

இந்த விம்பிள்டன் தொடர் ஜோக்கோவிச்சிற்கு மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. ஆஸ்திரேலிய ஓபனில் தடுப்பூசி சர்ச்சையால் ஜோக்கோவிச் ஆட முடியாமல் போனது. பிரெஞ்சு ஓபனில் காலிறுதியிலேயே வீழ்ந்திருந்தார். அடுத்து வரவிருக்கும் அமெரிக்க ஓபனிலும் தடுப்பூசி சர்ச்சை காரணமாக ஆடுவாரா என்பது தெரியாது. ஆக, இந்த விம்பிள்டனை விட்டால் இந்த சீசன் ஜோக்கோவிச்சிற்கு எந்த க்ராண்ட்ஸ்லாமும் இல்லாத சீசனாக முடியக்கூடும். இதனாலயே இந்த போட்டி அவருக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரியோஸூக்கு இதுதான் முதல் க்ராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டி. அதுவும் ஜோக்கோவிச்சிற்கு எதிராக எனும் போதே அதன் முக்கியத்துவத்தை விளக்க வேண்டிய அவசியமே இல்லை.

ஜோக்கோவிச் அரையிறுதியில் நாரியை வென்று இறுதிப்போட்டிக்கு வந்திருந்தார். கிரியோஸ் அரையிறுதியை ஆடவே இல்லை. நடால் காயம் காரணமாக விலகியதால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு வந்துவிட்டார்.

கிரியோல் துருதுருவென எதையாவது செய்துகொண்டு எதிராளிகளின் சமநிலையை குலைக்கும் வகையில் சலனப்படுத்தக்கூடியவர் என்பதால் ஜோக்கோவிச்சிற்கு இந்த போட்டி கொஞ்சம் கடினமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அப்படியிருந்தாலுமே எப்படியும் போராடி ஜோக்கோவிச்சே வெல்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்த புல் தரையில் கடந்த 3 விம்பிள்டன் தொடரையுமே ஜோக்கோவிச்தான் வென்றிருக்கிறார். அதே சாதனையை இங்கேயும் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்தவைதான் அரங்கேறியது. ஏறக்குறைய 3 மணி நேரத்திற்கும் மேல் நடந்த இந்த போட்டியில் 4-6, 6-3, 6-4, 7-6(3) என்ற செட் கணக்கில் ஜோக்கோவிச் வென்றார். முதல் செட்டின் முதல் கேமையே ஜோக்கோவிச்தான் வென்றார். இருவருமே மாறி மாறி கேம்களை வென்றனர். ஆனாலுமே இறுதியில் முதல் செட்டை கிரியோஸே வென்றார். 5 செட்களை கொண்ட போட்டிகளில் ஜோக்கோவிச் முதல் செட்டில் தோற்பதில் ஆச்சர்யமே இல்லை. அவர் முதல் செட்டை வென்றால்தான் ஆச்சர்யம். வழக்கம்போலவே தனது ஸ்டைலிலேயே முதல் செட்டில் சறுக்கிவிட்டு அடுத்த செட்டிலிருந்து திருப்பி அடிக்க ஆரம்பித்தார். இரண்டாவது செட்டில் ஆதிக்கமாக 6-3 என வென்றார். ஆட்டம் 1-1 என சமநிலைக்கு வந்தது. மூன்றாவது மற்றும் நான்காவது செட்களில் தொடக்கத்தில் கிரியோஸின் கைதான் ஓங்கியும் கூட இருந்தது. தொடக்க கேம்களை நன்றாக வெல்லவும் செய்தார். ஆனால், ஜோக்கோவிச் அவ்வளவு எளிதில் விட்டுவிடவில்லை. சறுக்கல்களிலிருந்து தொடர்ந்து மீண்டு வந்தார். தொடர்ச்சியாக பாய்ண்ட்களை எடுத்து மூன்றாவது செட்டை தனதாக்கினார். நான்காவது செட் இன்னும் பரபரப்பாக சென்றது. இருவரும் மாறி மாறி கேம்களை வென்றனர். கிரியோஸ்தான் முதலில் 6 கேம்களை வென்றிருந்தார். கூடுதலாக ஒரு கேமை வென்றிருந்தால் இந்த செட் டை ப்ரேக்கருக்கே சென்றிருக்காது. இறுதி செட் தொடங்கியிருக்கும். போட்டி இன்னும் பரபரப்பாகியிருக்கும். ஆனால், இப்போதும் ஜோக்கோவிச் விடவில்லை. விடாப்பிடியாக போராடி 6-6 என முடித்து செட்டை டை ப்ரேக்கருக்கு கொண்டு சென்றார். டை ப்ரேக்கர் மொத்தமும் ஜோக்கோவிச் ராஜ்ஜியம்தான். 7-3 என டை ப்ரேக்கரை வென்றார். அத்தோடு போட்டியையும் வென்றார். 21 வது க்ராண்ட்ஸ்லாமையும் வென்றார்.

ஜோக்கோவிச் ஆதிக்கம் செலுத்தினாலும் கிரியோஸ் வழக்கம்போல தனது துறுதுறுப்புத்தனத்தால் போட்டியை சுவாரஸ்யப்படுத்திக் கொண்டே இருந்தார். அண்டர் ஆர்ம் சர்வ்கள், கால்களுக்கிடையிலிருந்து ரிட்டர்ன் ஷாட், ஜோக்கோவிச்சை இரு மூலைக்கும் ஓட விடும் வகையிலான ஸ்லாஷ்கள், சாஃப்ட் ஹேண்ட் ஷாட்கள் போன்றவற்றை அநாயசமாக ஆடினார். சில சமயங்களில் ஜோக்கோவிச்சை சிதறி ஓட செய்து விழுந்து புரளவெல்லாம் வைத்தார். இதுபோக, ரசிகர்களுடன் சச்சரவு நடுவருடன் சலசலப்பு தனது ஆதரவாளர்களுடன் உரையாடல் என இந்த ஆட்டத்திற்கு விறுவிறுப்பை ஏற்றிக்கொண்டே இருந்தார்.

முடிந்தளவுக்கு ஜோக்கோவிச்சிற்கு நெருக்கடி கொடுக்கவும் தவறவில்லை. டை ப்ரேக்கரில் அந்த ஏழாவது சாம்பியன்ஷிப் பாயிண்ட்டை ஜோக்கோவிச் எடுப்பதற்குள் அவரை கொஞ்சம் பதற்றப்படுத்திவிட்டார். 1-6 என ஜோக்கோவிச் மேட்ச் பாயிண்ட்டிற்கு முயல அடுத்தடுத்து இரண்டு பாயிண்ட்டுகளை எடுத்து ஜோக்கோவிச்சை வெற்றிக்காக இன்னும் காக்க வைத்தார். கிரியோஸின் இந்த சேட்டைகளையெல்லாம் தாண்டியே ஜோக்கோவிச் வெல்ல வேண்டியிருந்தது.

இந்த வெற்றியின் மூலம் க்ராண்ட்ஸ்லாம் எண்ணிக்கையில் ஜோக்கோவிச் ஒரு படி முன்னேறியிருக்கிறார். 22 க்ராண்ட்ஸ்லாம்களுடம் நடால் முதலிடத்தில் இருக்க ஃபெடரரை தாண்டி 21 வது க்ராண்ட்ஸ்லாமை வென்று ஜோக்கோவிச் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியிருக்கிறார்.

-உ.ஸ்ரீராம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com