சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் சாம்பியன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்
டென்னிஸ் விளையாட்டு உலகை தனது ராக்கெட்டால் ஆட்சி செய்து வருபவர் ஜோகோவிச். செர்பிய நாட்டை சேர்ந்த இந்த 34 வயது வீரர், நடப்பு ஆண்டுக்கான சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். ஒற்றையர் ஆடவர் பிரிவில் இந்த விருதை வென்று சாதனை படைத்துள்ளார் அவர். 2011, 2012, 2013, 2014, 2015, 2018, 2021 என 7 முறை ஒற்றையர் பிரிவில் இந்த விருதை வென்ற ஒரே வீரரும் அவர்தான்.
ஒரு ஆண்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு இந்த விருதை கடந்த 1978 முதல் ஆண்டுதோறும் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு வழங்கி வருகிறது. நடப்பு ஆண்டில் மட்டும் ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன் என மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார் ஜோகோவிச். அதன் காரணமாக அவருக்கு இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது.
“ஏழாவது முறையாக ITF சாம்பியன் விருதை வென்றுள்ளது மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார் ஜோகோவிச். மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்ட்டி, ஆடவர் இரட்டையர் பிரிவில் குரோஷியா நாட்டின் நிகோலா மெக்டிக் மற்றும் மேட் பாவிக், மகளிர் இரட்டையர் பிரிவில் பார்போரா கிரெஜ்சிகோவா மற்றும் கேடரினா சினியாகோவா ஆகியோர் சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.