உலக டென்னிஸ் வீரர்கள் தரவரிசை: மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்த ஜோகோவிச்!
இருபது முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் உலக தொழில்முறை ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் விளையாட்டு வீரர்களுக்கான தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த மாதம் அவர் முதலிடத்தை டேனியல் மெத்வதேவிடம் பறிகொடுத்திருந்தார். இருந்தாலும் அண்மையில் முடிந்த இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் அவர் விளையாடாமலேயே இந்த முறை முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஜோகோவிச், ரோஜர் பெடரர் மற்றும் ரஃபேல் நடாலை கடந்து முதல் முறையாக முதலிடத்தை கடந்த மாதம் பிடித்திருந்தார் மெத்வதேவ். இருந்தாலும் இந்தியன் வெல்ஸ் தொடரில் அவர் எதிர்கொண்ட வீழ்ச்சி அவரை முதலிடத்தில் இருந்து வெளியேற்றியது. அதன் காரணமாக விளையாடாமலே புள்ளிகளில் அடிப்படையில் ஜோகோவிச் முதலிடம் பிடித்துள்ளார்.
தற்போது ஜோகோவிச் 8465 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். மெத்வதேவ் 8445 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் நடால் உளார். நடப்பு ஆண்டில் ஜோகோவிச் இதுவரை ஒரே ஒரு டென்னிஸ் தொடரில் மட்டுமே விளையாடியுள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் அவரால் முக்கியமான டென்னிஸ் தொடர்களில் விளையாட முடியவில்லை.