‘கம்மின்ஸ், ஸ்மித்திற்கு பதிலாக...கேப்டனாக இந்த இருவர் நல்ல சாய்ஸ்’ - முன்னாள் ஆஸி. வீரர்!

‘கம்மின்ஸ், ஸ்மித்திற்கு பதிலாக...கேப்டனாக இந்த இருவர் நல்ல சாய்ஸ்’ - முன்னாள் ஆஸி. வீரர்!
‘கம்மின்ஸ், ஸ்மித்திற்கு பதிலாக...கேப்டனாக இந்த இருவர் நல்ல சாய்ஸ்’ - முன்னாள் ஆஸி. வீரர்!

கேப்டன் பதவியில் இருந்து பேட் கம்மின்ஸ் விலகி, வேகப்பந்து வீச்சில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் இயான் ஹீலி வலியுறுத்தியுள்ளார். மேலும் அவருக்குப் பதிலான இரண்டு வீரர்களை கேப்டன் பதவிக்கும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

நான்கு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசித்திலும், டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றிபெற்று 2- 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த இரண்டு போட்டிகளுக்கும் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியை வழிநடத்திய பேட் கம்மின்ஸ், மார்ச் 1-ம் தேதி இந்தூரில் துவங்கவுள்ள 3-வது போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

உடல்நிலை சரியில்லாத அவரது தாயாரை பார்ப்பதற்காக தாயகம் திரும்பிய அவர், 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்தியா திரும்பி விடுவார் என்று கூறப்பட்ட நிலையில், அறிக்கை வாயிலாக 3-வது போட்டியிலிருந்து விலகியுள்ளதாக பேட் கம்மின்ஸ் அறிவித்துள்ளார். இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தூரில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் அறிவிக்கப்படலாம் எனக் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான இயான் ஹீலி, பேட் கம்மின்ஸ் டெஸ்ட் மற்றும் ஒருநாள் வடிவ கேப்டன் பதவியிலிருந்து விலகி, வேகப் பந்து வீச்சில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோருக்குப் பதிலாக கிளென் மேக்ஸ்வெல் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரில் ஒருவரை கேப்டனாக நியமிக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

SEN வானொலி நிகழ்ச்சியில் நேற்று பேசிய இயான் ஹீலி, “பேட் கம்மின்ஸ் கேப்டன் பதவி சுமையை நீண்ட காலம் சுமந்து கொண்டிருப்பதை நான் விரும்பவில்லை. அவரது கிரிக்கெட் வாழ்க்கையை சிறந்த பந்துவீச்சாளராகவே முடிக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். 4 முதல் 5 ஆண்டுகள் கேப்டன் பதவியில் இருக்கும் போது, அதிக அழுத்தத்தையே தருகிறது.

ஏற்கனவே, அவர் சில வருடங்கள் டெஸ்ட் கேப்டனாக இருந்துவிட்டார், இப்போது அவர் வீட்டில் ஒருவித சூழல் நிகழும் (தாயார் உடல்நிலை) நிலையில், குறுகிய வடிவ கேப்டன்ஷிப்பையும் சேர்த்து பார்த்து வருகிறார். அதனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளராக முடிக்கவே விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேட் கம்மின்ஸுக்கு பதிலாக யாரை கேப்டனாக நியமிக்கலாம் என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு, இடது கை பேட்டர் டிராவிஸ் ஹெட் பொருத்தமானவராக இருப்பான் என்று இயான் ஹீலி கூறியுள்ளார். "டிராவிஸ் ஹெட் மிகவும் திறமையானவர் என்று நான் நினைக்கிறேன். அவர் 21 வயதிலிருந்தே தெற்கு ஆஸ்திரேலியாவை வழிநடத்தி வருகிறார், அவர் மிகவும் திறமையானவர் மற்றும் நிறைய அனுபவங்களைப் பெற்றுள்ளார். அவர் தான் எனக்கு சரியான தேர்வு என்று தோன்றுகிறது” என்று இயான் ஹீலி தெரிவித்துள்ளார்.

மேலும், "கிளென் மேக்ஸ்வெல் போன்றவர்கள் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருக்க முடியும். ஆனால் நீண்ட கால கேப்டன் பதவிக்கான வாய்ப்புகளைப் பொறுத்தவரை டிராவிஸ் ஹெட்டைத் தவிர வேறு யாரையும் என்னால் நினைக்க முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து டிம் பெய்னி விலகிய நிலையில், பேட் கம்மின்ஸ், கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் அந்த அணியின் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு ஒருநாள் போட்டியிலிருந்து ஆரோன் பிஞ்ச் ஓய்வு பெற்றநிலையில், கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டார். 29 வயதான பேட் கம்மின்ஸ் இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 21.51 சராசரியில், 8 ஐந்து விக்கெட்டுகள் உட்பட 217 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com