வேண்டாம் ஐபிஎல்! இந்திய அணியின் கதவை தட்டிக்கொண்டே இருக்கும் வீரர்? - யார் இந்த அபிமன்யூ?

வேண்டாம் ஐபிஎல்! இந்திய அணியின் கதவை தட்டிக்கொண்டே இருக்கும் வீரர்? - யார் இந்த அபிமன்யூ?
வேண்டாம் ஐபிஎல்! இந்திய அணியின் கதவை தட்டிக்கொண்டே இருக்கும் வீரர்? - யார் இந்த அபிமன்யூ?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு பதிலாக வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் அபிமன்யூ ஈஸ்வரன்.

இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாக வேண்டும் என்பதும், அதில் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்பதும் ஒவ்வொரு வீரருடைய கனவாகவே இருக்கும். கிரிக்கெட்டின் சிறந்த வடிவமாக பார்க்கப்படும் டெஸ்ட் வடிவத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும், தனது நாட்டிற்காக பங்குபெற்று விளையாட வேண்டும் என்பது பல வீரர்களின் பெருங்கனவாகவே இருக்கும். பல வீரர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும், சில வீரர்களுக்கு கிடைக்கவே கிடைக்காது. சில வீரர்கள் என்னதான் மற்ற வடிவங்களில் சிறப்பாக செயல்பட்டாலும் டெஸ்ட் வடிவத்தில் அவர்களுக்கு உரிய வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது. அதற்கு ஒரு உதாரணம் என்றால் அது ஒருநாள் வடிவங்களில் 3 முறை இரட்டை சதமடித்த, தற்போதைய இந்திய கேப்டன் ரோகித் சர்மாவே ஒரு உதாரணமாக நாம் கூற முடியும். வெள்ளை பந்து ஆட்டங்களில் பல உலகசாதனைகளை வைத்திருக்கும் ரோகித் சர்மாவிற்கே டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு என்பது பல காலம் கிடைக்காமலே தான் இருந்து வந்தது.

அப்படி இந்தியாவின் டெஸ்ட் போட்டியில் பங்குபெற வேண்டும் என்பது பல வீரர்களின் கனவாகவே இருந்து வருகிறது. அந்த பெருங்கனவிற்க்கான நிறைவேற்றும் பாதையில் இந்திய அணியின் கதவை பலமுறை தட்டியிருக்கிறார் அபிமன்யூ ஈஸ்வரன்.

2021ல் இந்திய அணியின் ஸ்டேண்ட் பை ஓபனராக எடுக்கப்பட்ட அபிமன்யூ!

2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடுவதற்கு சென்றது. அந்த முக்கியமான டூரில் ஓபனர் ரோகித் சர்மாவிற்கு பதிலாக ஸ்டேண்ட் பை ஓபனராக அணியில் சேர்க்கப்பட்டிருந்தார் அபிமன்யூ ஈஸ்வரன்.

அதுமட்டுமில்லாமல் 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் ஸ்டேண்ட் பை வீரர்கள் பட்டியலிலும் அபிமன்யூ ஈஸ்வரனின் பெயர் இடம்பெற்றிருந்தது. அந்த அளவு கடந்த 5 வருடங்களாக இந்திய அணியின் தேர்வுகுழுவின் கதவை தட்டிக்கொண்டே இருக்கிறார் அபிமன்யூ.

யார் இந்த அபிமன்யூ ஈஸ்வரன்?

உத்திரபிரதேசத்தில் டேராடூன் பகுதியில் பிறந்த அபிமன்யூ ஈஸ்வரன், கொல்கத்தா அணிக்கு இடம்பெயர்ந்து தனது 10 வயதிலிருந்து பயிற்சியை மேற்கொண்டு வந்தவர், பின்னர் பெங்கால் அணியில் இடம்பிடித்து ஆடிவருகிறார்.

2013ல் ரஞ்சிக்கோப்பைக்கான பெங்கால் அணியில் இடம்பிடித்த அவர், லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் தனது முதல் போட்டியை விஜய் ஹசாரே ட்ராபியில் 2015ல் தான் விளையாடினார். ஆனாலும் பின்னர் அவர் பெரிதாக வெளிச்சத்திற்கு வரவே இல்லை.

6 போட்டிகளில் 861 ரன்கள் எடுத்து திரும்பி பார்க்க வைத்த அபிமன்யூ!

2018-2019 ரஞ்சிக்கோப்பை தொடரில் தனது அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்திய அபிமன்யூ வெறும் 6 போட்டிகளில் 861 ரன்கள் குவித்து அனைவரது பார்வையையும் தன் பக்கம் ஈர்த்தார். அதன் பிறகான அவரது பேட்டிங் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பணமாகவே இருந்து வருகிறது.

சச்சின் விக்கெட்டை வீழ்த்திய பியூஸ் சாவ்லாவை மிரள வைத்த 10 வயது சிறுவன்!

2005-2006ஆம் ஆண்டில் சேலஞ்சர் டிராபியில் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரை கூக்ளி மூலம் வெளியேற்றி இருந்தார் லெக்-ஸ்பின்னர் பியூஸ் சாவ்லா. அதில் ”லிட்டில் மாஸ்டர்” சச்சினை இரண்டுமுறை அவுட்டாக்கி இருந்தார் சாவ்லா. ஆனால் அதே வருடம் கொல்கத்தாவிற்கு சென்ற அவர் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பந்துவீச்சை பற்றி விளக்கி, வலை பயிற்சியில் அவர்களுக்கு எதிராக பந்துவீசி கொண்டிருந்தார். ஆனால் அப்போது சாவ்லா வீசிய பந்தை அற்புதமாக எதிர்கொண்ட 10 வயது கூட நிரம்பாத ஒரு சிறுவன், அவரை மட்டுமல்ல சுற்றியிருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தான். அது வேறு யாருமல்ல அபிமன்யூ ஈஸ்வரன் தான், அவருக்கு அப்போது 10 வயது கூட நிரம்பவில்லை.

பின்னர் அவரது பயிற்சியாளர் எப்படி அவரது பந்துகளை சிறப்பாக விளையாடினாய் என்று கேட்டதற்கு பயிற்சியாளருக்கே விளக்கமளித்தாராம் அபிமன்யூ ஈஸ்வரன்.

சிறப்பான முதல் தர ரெக்கார்டு இருந்தும் ஐபிஎல்-ல் பதிவு செய்யவில்லை!

கடந்த 4-5 வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் அபிமன்யூ, முதல்தர போட்டிகளில் 18 சதங்கள். 23 அரைசதங்கள் என விளாசி 5576 ரன்களை குவித்திருக்கிறார் மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளில் 7 சதங்கள், 21 அரை சதங்கள் என விளாசி 3376 ரன்களை சேர்த்துள்ளார். மேலும் டி20 வடிவத்தில் 3 அரைசதங்களை விளாசியிருக்கும் அபிமன்யூ, ஒரு சதத்தையும் விளாசி இருக்கிறார்.

ஆனால், அவர் இதுவரை ஐபிஎல் தொடர்களில் பங்கேற்கவே இல்லை, மற்றும் ஐபிஎல் தொடருக்கு தன்னை ரெஜிஸ்டர் செய்துகொள்ளவும் இல்லை. ஐபிஎல் தொடரை பின்னுக்கு வைத்துவிட்டு இந்திய அணியில் இடம்பிடிப்பது மட்டுமே கனவாக வைத்து விளையாடி தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெற்ற நிலையில் தற்போது ஐபிஎல் மினி ஏலத்தில் அவர் இடம்பெற்றுள்ளார்.

அபிமன்யூவின் முன்னேற்றத்தில் அவரது தந்தை!

தொழில் ரீதியாக சார்ட்டடு அக்கவுண்டண்டாக இருக்கும் அபிமன்யூவின் தந்தை டேராடூனில் பல்நோக்கு விளையாட்டு அகாடமியை திறந்துள்ளார். அந்த அகாடமியின் பெயர் "அபிமன்யு ஈஸ்வரன் அகாடமி". அபிமன்யூவின் கிரிக்கெட் பயணத்தில் அவருடைய தந்தையின் பங்கு பெரிதாகவே இருக்கிறது.

ரோல் மாடலாக இருக்கும் ”ராகுல் டிராவிட்”!

எனக்கு ரோல் மாடல் 'தி வால்' ராகுல் டிராவிட் தான்! - அபிமன்யூ

ராகுல் டிராவிட் குறித்து பேசியிருக்கும் அபிமன்யூ, “சிறுவயதில் ராகுல் சார் பேட்டிங் செய்வதை நான் விரும்பினேன். கடினமான சூழ்நிலைகளில் ரன்களை எடுக்க இந்திய அணிக்கு யாராவது தேவைப்படும்போது அவர் முன்னேறி அழுத்தத்தின் கீழ் ரன்களை வழங்குவார். புதிய பந்து வெளிநாட்டு போட்டிகளில் விளையாட கடினமாக இருக்கும். நம்பர் 3 இடத்தில் பேட்டிங் செய்வது மிகவும் சவாலானதாக இருக்கும். அவர் அந்த சமயத்தில் ஒருபோதும் ஆட்டத்தை தவறவிடாமல், பந்து வீச்சாளர்களை திறம்பட எதிர்கொண்டு பெரிய ஸ்கோரை பதிவு செய்வார். அவரது ஆட்டம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயமாக எளிதாக்கியது. ராகுல் சார் ஒரே சமயம் அமைதியாகவும் ஆக்ரோஷமாகவும் விளையாடுவார். அவர் தான் எனக்கு ரோல் மாடல்.'' என்றார் ஈஸ்வரன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com