"5 கோடியை சத்தியமாக நான் எதிர்பார்க்கவேயில்லை" - ஆச்சரியத்தில் தமிழக வீரர் ஷாருக்கான்!
ரூ.5 கோடியை சத்தியமாக தான் எதிர்பார்க்கவேயில்லை என்று ஐபிஎல் போட்டிக்காக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தேர்வாகியுள்ள தமிழக வீரர் ஷாருக்கான் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் ஷாருக்கானை ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. இது குறித்து புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த ஷாருக்கான் "முதலில் மிகவும் பதற்றமாக உணர்ந்தேன், ஆனால் மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். களத்திற்கு உள்ளே சென்று என்னால் என்ன செய்ய முடியும் என்பதை காண்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐ.பி.எல் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியபோதுதான், நாம் சையத் முஷ்டக் அலி டி20 கோப்பையில் நன்றாக விளையாடி இருக்கிறோம் என்பதை உணர்ந்தேன்" என்றார்.
மேலும் "கடந்தாண்டு மிகவும் எதிர்பார்த்தேன், ஆனால் ஐ.பி.எல்லில் வாய்ப்பு கிடைக்கவில்லை, அதனால் ஏமாற்றம் அடைந்தேன். தமிழக அணி விரர்கள் அனைவருமே கத்தி கொண்டாடினர், அது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அம்மாவிடம் இந்தச் செய்தியை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சியாக இருந்தது. தினேஷ் கார்த்திக் அவரது அறைக்கு என்னை அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அதே நேரம் இது தான் முதல் படி, விஜய் ஹசாரே கோப்பையில் கவனம் செலுத்து, இது முடிந்த பின்பு ஐ.பி.எல் குறித்து யோசி என ஆலோசனை வழங்கினார்" என்றார் ஷாருக்கான்.
தொடர்ந்து பேசிய அவர் " கிறிஸ் கெயில், கே.எல் ராகுல் இந்த மாதிரி ஒரு பேட்டிங் "லைன் அப்" கீழ் என் பெயர் வருவதில் மகிழ்ச்சி. பல மடங்கு சவால் நிறைந்ததாக ஐ.பி.எல் தொடர் இருக்கும், அதை எதிர்கொள்ள தயாராகி வருகிறேன். அதிரடி ஆட்டக்காரராக தொடர்ந்து சீரான வேகத்தில் விளையாடுவது கடினம். நம் மீது முழு நம்பிக்கையோடு ஆட வேண்டும்.முன்னாள் கேப்டன் தோனியுடன் என்னை ஒப்பிட விரும்பவில்லை, ஆனால் அவர் பெயருடன் என் பெயரை குறிப்பிடுவது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார் ஷாருக்கான்.