மஞ்சள் சிங்கங்களும் மகேந்திர சிங் தோனியும் - #IPL ஒரு குட்டி ரீவைண்ட்

மஞ்சள் சிங்கங்களும் மகேந்திர சிங் தோனியும் - #IPL ஒரு குட்டி ரீவைண்ட்
மஞ்சள் சிங்கங்களும் மகேந்திர சிங் தோனியும் - #IPL ஒரு குட்டி ரீவைண்ட்

கிரிக்கெட் உலகில் ஒரு புதுமைதான் எனத் தெரிந்திருந்தாலும், அது இவ்வளவு பெரிய பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறதென்பதை அறியாமலேயே 2008 இல் .பி.எல் தொடர் ஆரம்பிக்கப்பட்டது. காலங்கள் உருண்டோடி இப்போது 15 வது சீசனுக்கு .பி.எல் வந்து சேர்ந்திருக்கிறது. இந்த 15 ஆண்டுகளில் எத்தனை எத்தனையோ விஷயங்கள் அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது. விடலை பருவத்தில் ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தவர்கள் இன்று குடும்பஸ்தர்களாக மாறிவிட்டார்கள். .பி.எல் க்காக டி.வி யில் சோனி சேனலை தேடிப்பிடிப்பதையே பெரும் போராட்டமாக கொண்டிருந்த காலத்திலிருந்து டிஸ்னி ஹாட்ஸ்டார் காலம் வரை முன்னேறியிருக்கிறோம். ஆரோன் ஃபின்ச் .பி.எல் இல் மட்டும் 8 வெவ்வேறு அணிகளுக்காக ஆடிவிட்டு இந்த முறை புதிதாக வேறொரு  அணிக்காக ஆட தயாராகிக் கொண்டிருக்கிறார். ஏன், .பி.எல் அணிகளிலேயே கூட சில காணாமல் போயிருக்கின்றன. சில புதுவரவாக எண்ட்ரி கொடுக்கப்போகின்றன. 

எத்தனையோ மாற்றங்கள், எல்லாமே மலைப்புக்குரியவை. ஆனால், இந்தக் கால ஓட்டத்தில் கரைந்துபோய் மாறாமல் இன்னமும் அதே பழைய கம்பீரத்தோடே பளிச்சிட்டு கொண்டிருக்கும் ஒரே நிறம் மஞ்சள் மட்டுமே. 2008 சீசனில் ரன்னர் அப்பாக தன்னை அறிமுகம் செய்து கொண்ட சென்னை அணி இன்னமும் அதே கம்பீரத்தோடுதான் கர்ஜித்துக் கொண்டிருக்கிறது. கர்ஜிக்க வைத்துக் கொண்டிருப்பவர் அதே மகேந்திர சிங் தோனி!

நடந்து முடிந்திருக்கும் 14 சீசன்களில் 4 சீசன்களை மட்டுமே சிஎஸ்கே வென்றிருக்கிறது. வெறுமனே சாம்பியன்ஷிப் டைட்டில்களை மட்டுமே கணக்கிட்டால் இப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸை விட மும்பை இந்தியன்ஸே டாப்பில் இருக்கிறது. ஆனால், வெற்றிகரமான அணி என்பதை கோப்பைகளை மட்டுமே வைத்து அளவிட்டு விட முடியுமா? அது அதையும் தாண்டியது. இந்த 14 சீசன்களில் சென்னையை விட சீராக பெர்ஃபார்ம் செய்திருக்கும் ஒரு அணியை குறிப்பிட வாய்ப்பே இல்லை. இயலவே இயலாது. 'Form is temporary Class is Permanent' என வீரர்களை வர்ணிக்க பயன்படுத்தும் மொழியை சிஎஸ்கேவுக்கும் பயன்படுத்தலாம். சென்னை அணி சாம்பியன் ஆகிறதோ இல்லையோ ஏமாற்றமளிக்காத வகையில் சீரான பெர்ஃபார்மென்ஸ் அந்த அணியிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். இதுவரை ஆடியிருக்கும் சீசன்களில் ஒரே ஒரு முறை மட்டுமே சிஎஸ்கே ப்ளே ஆஃப்ஸுக்கு தகுதிப்பெறாமல் வெளியேறியிருக்கிறது. அது 2020 இல் நிகழ்ந்திருந்தது. 'கண்ணா...நா யானே இல்ல குதிரே விழுந்தா டக்குன்னு எந்திருச்சுருவேன்' என சூப்பர் ஸ்டார் பேசிய வசனம் அடுத்த சீசனிலேயே கம்பேக் கொடுத்து கோப்பையைத் தட்டி தூக்கி நடப்பு சாம்பியனாக 15 வது சீசனில் நுழைய இருக்கிறது.

சிஎஸ்கேவின் இந்தப் பயணம் ஏகப்பட்ட விமர்சனங்களையும் தடைகளையும் தாண்டியே நகர்ந்துக் கொண்டிருக்கிறது. சச்சின், சேவாக், கங்குலி, டிராவிட் என எல்லா அணிகளும் சூப்பர் ஸ்டார் வீரர்களுக்கு வலைவீசி விட 'இவர் அதுக்கு சரிபட்டு வருவாரா' எனும் சிறு சந்தேகத்தோடையே சிஎஸ்கே தோனியை ஒப்பந்தம் செய்தது. அப்படிப்பட்ட சிஎஸ்கே நிர்வாகம்தான் இன்று தோனி சொல்வதுதான் வேதவாக்கு என்ற ரீதியில் 'தலைவன் இருக்கின்றான்' எனும் ஒற்றை ஃபார்முலாவோடு இறங்கி அடித்துக் கொண்டிருக்கிறது. அன்று 2008 இல் தோனியோடு எதிரணி கேப்டன்களாக டாஸில் பங்கேற்ற அனைவரும் இப்போது ஓய்வு பெற்றுவிட்டார்கள். தோனியின் அடுத்த தலைமுறையை சேர்ந்த விராட் கோலியே கேப்டனாகி ஒரு ரவுண்ட் வந்து கேப்டன் பதவியிலிருந்து விலகிவிட்டார். பஞ்சாப் என்கிற ஒற்றை அணி மட்டுமே இதுவரை 12 கேப்டன்களை பயன்படுத்தி ஓய்ந்துவிட்டது. ஆனால், இன்னமும் சிஎஸ்கேவுக்கு தோனிதான் கேப்டன். அதுவும் வெற்றிகரமான கேப்டன்!

2010-13 சிஎஸ்கே மற்றும் தோனி இருவருக்குமே இந்தக் காலக்கட்டம் பொன்னான தருணங்களால் நிறைந்திருந்தது. 2010 இல் சிஎஸ்கே முதல் முறையாக .பி.எல் கோப்பையை வென்றிருந்தது. 2011 இல் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றிருந்தது. உலகக்கோப்பையை வென்ற அதே கையோடு மீண்டும் அதே ஆண்டில் .பி.எல் கோப்பையையும் தோனி தலைமையில் சிஎஸ்கே வென்றிருக்கும். 2013 இல் ஒரு புதிய அணியோடு இங்கிலாந்துக்கு சென்ற இந்தியா தோனி தலைமையில் சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றது. வெற்றிகளாலும் சாதனைகளாலும் மட்டுமே நிறைந்திருந்த நான்காண்டுகள் அது. தோனியும் சிஎஸ்கேவும் உச்சத்தில் இருந்தார்கள். ஆனால், இதே நிலை தொடரவில்லை. தன்னுடைய ஃபார்ம் மற்றும் கோலியின் எழுச்சி இந்திய அணியில் தோனியின் கடைசிக்கட்டத்தை நோக்கி நகர்த்தியது. .பி.எல் இல் சூதாட்டப்புகாரில் சிஎஸ்கேவிற்கு இரண்டாண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. சிஎஸ்கே இல்லாமல் .பி.எல் நடக்கும். தோனியும் ரெய்னாவும் வேறு வேறு அணிகளுக்காக ஆடுவார்கள் என்பதையெல்லாம் அதுவரை யாரும் கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்கள். அந்தக் கொடூரமும் அரங்கேறியது. தோனி நீல ஜெர்சியில் புனேவுக்கும் ரெய்னா ஆரஞ்சு ஜெர்சியில் குஜராத்துக்கும் ஆடினார்கள். புனே அணி நிர்வாகத்தால் தோனி அவமதிக்கப்பட்டதும் அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகியதும் என அந்த இரண்டு ஆண்டுகள் மொத்தமும் ரசிகர்களுக்கு ஒரு கொடுங்கனவுதான். எப்படி வெற்றி நிரந்தரமானது இல்லையோ அதேமாதிரி வீழ்ச்சியும் நிரந்தரமானது இல்லையே?

இரண்டாண்டுகள் தடைக்கு பின்பு சிஎஸ்கே மீண்டு வந்தது. அதே பழைய சிஎஸ்கேவாக இவர்களால் ஜொலிக்க முடியுமா? சூதாட்டப்புகாரில் சிக்கிய அணி என்கிற கறையை இவர்களால் போக்க முடியுமா? வயதானடாடிஸ் ஆர்மியை வைத்துக் கொண்டு துடிப்புமிக்க இளம் அணிகளை வீழ்த்த முடியுமா? சிஎஸ்கே மீது ஏகப்பட்ட கேள்விக்கணைகள் வீசப்பட்டன. அப்போதும் சிஎஸ்கேவிடமிருந்து அதே பதில்தான். 'தலைவன் இருக்கிறான்'!!

தோனியின் மீது சிஎஸ்கேவும் ரசிகர்களும் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. அஷ்வின், ஜகாதி, மோகித் ஷர்மா, ஈஸ்வர் பாண்டே என அதுவரை பெயரை அறியாத வீரர்கள் சிஎஸ்கேக்காக ஆடி ஸ்டார்கள் ஆனதை போல,  இந்த முறை தீபக் சஹாரும் ஷர்துல் தாகூரும் ஸ்டார்களாக ஜொலித்திருந்தனர். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ரிட்டையர்ட் ஆகியிருந்த வாட்சன் வெளு வெளுவென வெளுத்தார். மும்பையிலிருந்து வந்திருந்த அம்பத்தி ராயுடு புத்துணர்ச்சியோடு பிரித்து மேய்ந்தார். இவர்களோடு தோனியும் ரெய்னாவும் கரம்கோர்க்க மீண்டும் சிஎஸ்கேவிடமே வெற்றி கோப்பை வந்து சேர்ந்தது. விளையாட்டு உலகில் நிகழ்த்தப்பட்ட தரமான கம்பேக்களில் சிஎஸ்கேவிற்கு முக்கிய இடம் நிச்சயமாக உண்டு.

அடுத்த 2019 சீசன் அதிலும் சீரான ஆட்டம் தொடர்கிறது. ரன்னர் அப் ஆகிறார்கள். அடுத்ததாக 2020 சீசன். கொரோனாவால் உலகமே அதிர்ந்து போயிருந்த இந்த ஆண்டில் நம்மை போன்றே சிஎஸ்கேவும் பெரும் சறுக்கலை சந்தித்தது. .பி.எல் வரலாற்றிலேயே முதல் முறையாக ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை சிஎஸ்கே தவறவிட்டது. கிரிக்கெட்டில் இதெல்லாம் சகஜம் என்ற வகையில் இதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அந்த சீசனில் சிஎஸ்கே ஆடிய விதம், அதுதான் ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கியது. முனைப்பே இல்லாமல் ஆடி ஒரு வெற்றியை பெறுவதற்கு கூட தடுமாறிக் கொண்டிருந்தது. 'Too many holes in the Ship' என தோனியே கையறு நிலையில் நின்ற சம்பவமெல்லாம் அரங்கேறியிருந்தது. மீண்டும் சிஎஸ்கே மீது சரமாரியான விமர்சனங்கள். தோனி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க மறுக்கிறார், தோனியால்தான் முடியவில்லை எனில் ஒதுங்கிவிட வேண்டியதுதானே என மீண்டும் கேள்விக்கணைகள். இந்த முறை இந்த விமர்சனங்களுக்கெல்லாம் சிஎஸ்கே இல்லை தோனியே பதில் சொன்னார். 'உறுதியாக நான் ஓய்வுபெறப்போவதில்லை. நாங்கள் கம்பேக் கொடுப்போம். அதுதானே எங்கள் வழக்கம்' என எனர்ஜியூட்டினார்.

2020 இல் ஆடிய அதே அணியில் கொஞ்சமே கொஞ்சமான மாற்றங்களோடு 2021 சீசனில் சிஎஸ்கே நுழைந்தது. என்ன மாயம் நிகழ்ந்ததோ தெரியவில்லை. கடந்த முறை விமர்சித்தவர்கள் அத்தனை பேரும் இந்த முறை சிஎஸ்கேவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். வரிசையாக வெற்றிகள். ரொம்பவே சௌகரியமாக அத்தனை அணிகளையும் வீழ்த்தியது. இளம் வீரரான ருத்துராஜே பல போட்டிகளை சிஎஸ்கேவுக்கு வென்று கொடுத்தார். அவரோடு தோளோடு தோளாக டூப்ளெஸ்சிஸ் துணை நின்றார். சிரமமேயின்றி ப்ளே ஆஃப்ஸிற்கு சென்றனர். இலகுவாக தங்களுடைய ஸ்டைலில் தாங்கள் வீழ்ந்து சாம்பலாகியிருந்த அதே துபாய் மண்ணில் சிஎஸ்கே மீண்டும் சாம்பியன் ஆனது. தோனியின் நம்பிக்கை வார்த்தைகள் நிஜமானது.

தோனிக்கு வயதாகியிருக்கிறது. நரை வந்திருக்கிறது. அதைத்தாண்டி சிஎஸ்கேவின் செயல்பாட்டிலோ தோனியின் கேப்டன்சியிலோ எந்த மாற்றமும் இல்லை. 2008 இல் இருந்த துடிப்போடும் சீரோடுமே சிஎஸ்கே இன்னமும் ஆடிக்கொண்டிருக்கிறது. இன்னமும் அதே தோனிதான் சிஎஸ்கேவின் கைகளை பற்றி வெற்றியை நோக்கி அழைத்து சென்றுக் கொண்டிருக்கிறார். வீழ்ச்சியிலிருந்து நம்பிக்கையோடு எழ வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த மஞ்சள் ஜெர்சி என்றும் மங்கப்போவதில்லை!

- .ஸ்ரீராம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com