ஏமாற்றி விட்டார்கள்: பந்துவீச்சாளர்களை விளாசிய தோனி!
’எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் ஏமாற்றிவிட்டார்கள்’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறினார்.
பதினோறாவது ஐபி்எல் தொடரில் நேற்று நடந்த 33 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. சென்னை அணியில் மாற்றங்கள் இல்லை. கடந்தப் போட்டியில் பங்கேற்றவர்களே இதிலும் பங்கேற்றார்கள். கொல்கத்தா அணியில் காயமடைந்த நிதிஷ் ராணாவுக்கு பதில் ரிங்கு சிங் சேர்க்கப்பட்டிருந்தார். டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் தோனி ஆட்டமிழக்காமல் 43 ரன்களும், ஷேன் வாட்சன் 36 ரன்களும் எடுத்தனர். பியுஷ் சாவ்லா, சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
178 ரன்கள் என்ற வெற்றி இலக்கை கொல்கத்தா அணி, 18 ஆவது ஓவரிலேயே எட்டியது. சிறப்பான ஆட்டத்தை சுப்மன் கில் 36 பந்துகளில் 57 ரன்களும், தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில் 45 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சும் பீல்டிங்கும் மோசமாக இருந்தது. தொடக்கத்தில் ஆசிப் பந்துவீச்சில் சுனில் நரேன் எளிதாகக் கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை, கோட்டை விட்டார் ஜடேஜா. ஒரு ரன்னில் தடுத்திருக்கப்பட வேண்டிய பந்துகள் பவுண்டரிக்கு எளிதாகச் சென்றது. இதனால், கோபத்தை எப்போதும் வெளிப்படுத்தாத கூல் கேப்டனின் முகம் அதை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தது. பின்னர் அதைப் போட்டிக்குப் பின் வெளிப்படுத்தினார் தோனி.
(கேட்சை விட்ட ஜடேஜா)
அவர் கூறும்போது, ’இந்த பிட்ச் முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக மாறிவிட்டது. இந்த தோல்வி ஒட்டுமொத்தமாக ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. குறிப்பாக பந்துவீச்சாளர்கள். பீல்டிங்கும் மோசமாக அமைந்துவிட்டது. அதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். பீல்டிங்கிற்கு கிளாசிக் உதாரணம், மைக்கேல் ஹசி. அவர் போல அர்ப்பணிப்புடன் விளையாடுவது முக்கியம். இந்தப் போட்டியில் நாங்கள் எப்படி பீல்டிங் செய்தோம் என்பது எங்களுக்குத் தெரியும். எங்களது எந்த பந்துவீச்சாளரும் சிறப்பாக பந்துவீசவில்லை. அதனால் கடைசி நேரத்தில் பந்துவீச்சாளர்களை மாற்றியமைத்தேன். பந்துவீச்சாளர்களுடன், எங்கள் வலிமை என்ன என்பதை பார்க்க வேண்டும். அவர்கள், பந்துவீச்சின் வேகத்தை தக்கவைக்க வேண்டும். எதிரணி பேட்ஸ்மேன்களின் பலம் என்ன என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் அது அழுத்தத்தைதான் கொடுக்கும். பந்துவீச்சாளர்களிடம் இருந்து இது வெளிப்பட வேண்டும்’ என்றார்