கத்தார் மீதான தடை உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பாதிக்காது - ஃபிஃபா
கத்தார் மீது அரபு நாடுகள் விதித்துள்ள தடை வரும் 2022 ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை பாதிக்காது என சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா தெரிவித்துள்ளது.
கத்தார் நாடு, பயங்கரவாதத்திற்கு ஆதரவு தருவதாகக் கூறி சவூதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகள் கத்தாருடனான உறவை முறித்துக் கொண்டது. இதனால், வரும் 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை கத்தாரில் நடத்தக்கூடாது என அரபுநாடுகள் ஃபிஃபா அமைப்புக்கு கடிதம் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை நடத்தும் ஃபிஃபா-வின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ இதனை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை கத்தாரில் நடத்தக்கூடாது என இதுவரை எந்த நாடும் கடிதம் அனுப்பவில்லை. கத்தார் மீது 6 நாடுகள் விதித்துள்ள தடை அங்கு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை எந்த விதத்திலும் பாதிக்காது என்று தெரிவித்தார்.