பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர் இல்லை: அமைச்சர் திட்டவட்டம்
தீவிரவாதத்துக்கு பொருளுதவி செய்வதை நிறுத்தும்வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர் நடத்தும் திட்டமில்லை என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சீனாவில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் கோயல், எல்லா விவகாரங்களிலும் ஒரு எல்லை உண்டு. பாகிஸ்தான் தனது எல்லையைத் தாண்டி விட்டது. எல்லையைத் தாண்டும்போது அதற்கான பதிலடி கொடுக்க வேண்டியது அவசியம். அந்த நாட்டுடன் விளையாட்டுப் போட்டியைத் தவிர்ப்பதே நாம் கொடுக்கும் பதிலடி என்று அவர் தெரிவித்தார். எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கும் வரை, அந்நாட்டுடன் கிரிக்கெட் தொடரை நடத்துவதில்லை என்ற கொள்கையில் அரசு உறுதியாக இருப்பதாகவும் கோயல் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து வெளியேறிய ராமச்சந்திர குஹா, தனது ராஜினாமா கடிதத்தில் எழுப்பியிருந்த கேள்விகள் குறித்து கருத்து தெரிவிக்க விஜய் கோயல் மறுத்து விட்டார். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர் கடந்த 2012-13க்குப் பின்னர் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.