தண்ணீர் பஞ்சத்தால் கேன்சல் ஆன கிரிக்கெட் போட்டிகள்!
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தில் கடும் வறட்சி நிலவுவதால், தண்ணீர் பஞ்சம் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் கேன்சல் செய்யப்பட்டுள்ளன.
தென்னாப்பிரிக்க தலைநகர் கேப் டவுனில் இந்த வருடம் மழை அளவு குறைந்துவிட்டது. இதனால் அங்கு கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் மக்களுக்கு ஒருவரின் தினசரி தேவைக்கு 50 லிட்டர் தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
அதோடு, மாநகர குடிநீர் வாரியம் கொடுக்கும் தண்ணீரை, வீட்டுத் தோட்டம் மற்றும் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்னும் அடுத்தடுத்த மாதங்களில் தண்ணீர் பஞ்சம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் இங்குள்ள நீர்நிலைகள் ஏப்ரல் 12ம் தேதிக்குப் பிறகு தண்ணீரே இல்லாத அளவிற்கு வறண்டுவிடும் என்றும் முன்னெச்சரிக்கையாக, தண்ணீர் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மோது மழை பெய்தது. அந்த மழை காரணமாக கொஞ்சம் தண்ணீர் கிடைத்தது. ஆனால், அணைகள் அதிகளவில் நிரம்பவில்லை. கிடைத்த அந்த தண்ணீரும் குறைந்துவருகிறது.
இந்த தண்ணீர் பஞ்சம் காரணமாக, தென்னாப்பிரிக்காவின் அனைத்து கிளப் மற்றும் பள்ளிகளுக்கு இடையே நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டிகள் கேன்சல் செய்யப்பட்டுள்ளன. இதை தென்னாப்பிரிக்காவின் மேற்கு மாகாண கிரிக்கெட் சங்கம் உறுதி செய்தது.
இதற்கிடையே, இந்திய தொடரை அடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட இருக்கிறது.