கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவியின் நீதிமன்றக் காவல் ஜூன் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவு பேராசிரியராக பணி புரிந்தவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய ஆடியோ வெளியானது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த, மாணவிகளை தவறாக வழிநடத்தியதாகக் கூறப்படும் பேராசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கல்லூரி முதல்வர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நிர்மலா தேவி மீது அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து நிர்மலா தேவி கடந்த ஏப்ரல் 16 ம் தேதி கைது செய்யப்பட்டார். கைதான நிர்மலா தேவி, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதின்றக் காவல் முடிந்து இன்று விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நிர்மலா தேவியின் நீதிமன்ற காவல் வரும் ஜுன் 6ம் தேதி வரை அதாவது மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.