பிராக்டிஸ் பண்ற ஐடியா இல்லையா ? ரூமில் முடங்கியதா இந்திய அணி ?

பிராக்டிஸ் பண்ற ஐடியா இல்லையா ? ரூமில் முடங்கியதா இந்திய அணி ?
பிராக்டிஸ் பண்ற ஐடியா இல்லையா ?  ரூமில் முடங்கியதா இந்திய அணி ?

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. முதல் போட்டியில் கேப்டன் விராட் கோலி சதம் அடித்தது சற்றே ஆறுதலாக இருந்தது.

ஆனால், லாட்ஸ் போட்டியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. கோலி உட்பட அனைத்து வீரர்களும் சொதப்பினார்கள். முதல் இன்னிங்சில் 107, 2வது இன்னிங்சில் 130 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இரண்டு இன்னிங்சில் அஸ்வின்தான்(29, 33) அதிக ஸ்கோர் அடித்தார். இதனால், இந்திய வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. 

இந்த இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்கம்மில் 18 ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி நாட்டிங்கம்முக்கு ஏற்கெனவே சென்றடைந்துவிட்டது. ஆனால் போட்டி தொடங்க இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கின்ற நிலையில், இந்திய அணி இன்னும் வலைப்பயிற்சியில் ஈடுபடாமல் தங்களது ஹோட்டல் அறைகளிலேயே முடங்கி இருக்கின்றனர்.

இந்திய அணி லார்ட்ஸ் தோல்வியில் இருந்து வெளியே வர வேண்டும் என்றால் ஹோட்டல் அறைகளில் இருந்து வெளியேறி மைதானத்துக்கு வந்து பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். லார்ட்ஸ் தோல்விக்கு பின்பு இந்திய அணியை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தோல்வி தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள விராட் கோலி, “சில நேரங்களில் நாங்கள் வெற்றி பெறுகிறோம். மற்ற சில நேரங்களில் கற்றுக்கொள்கிறோம். நீங்கள் எப்போது எங்களை கைவிட்டதில்லை. நாங்களும் உங்களை எப்போது கைவிடமாட்டோம் என உறுதியளிக்கிறோம். அது இப்போதும்.. எப்போதும்” என்று தெரிவித்துள்ளார். ஆனால் போட்டிக்கு முன்பாக தீவிர பயிற்சியில் ஈடுபடாமல் அறையில் வீரர்கள் முடங்கினால் எப்படி வெற்றிப் பெற முடியும் என்ற விமர்சனங்களும் இப்போது எழ தொடங்கியுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com