லுங்கி நிகிடி தந்தை திடீர் மரணம்: தென்னாப்பிரிக்கா பறந்தார்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த லுங்கி நிகிடியின் தந்தை மரணமடைந்ததை அடுத்து அவர் தென்னாப்பி ரிக்கா சென்றார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி. சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் அறிமுகமானார். அறிமுகமான போட்டியிலேயே ஆறு விக்கெட்டுகள் எடுத்து அசத்தியவர். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தார். இதற்காக இந்தியா வந்திருந்தார்.
இந்நிலையில் அவரது அப்பா, ஜெரோம் நிகிடி சனிக்கிழமை திடீரென்று இறந்ததால் அவர் தென்னாப்பிரிக்கா புறப்பட்டார்.
(அப்பா அம்மாவுடன் லுங்கி நிகிடி)
சில நாட்களுக்கு முன் ஜெரோம் நிகிடி உடல் நிலை சரியில்லாததால், ஆபரேஷன் செய்திருந்தார். இந்நிலையில் சனிக்கிழமை திடீரென மரணமடைந்தார். இந்த தகவல் லுங்கி நிகிடிக்குத் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக தென்னாப்பிரிக்கா செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதையடுத்து அவர் அங்கு புறப்பட்டார்.
இதுபற்றி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரிய தலைவர் கிறிஸ் நென்ஸானி கூறும்போது, ’ஜெரோம் நிகிடியின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். லுங்கி நிகிடி, இந்த சின்ன வயதில் தந்தையை இழந்தது கடினமானது. ஜெரோம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.