சவும்யா, மகமத்துல்லா சதம் வீண்: வென்றது நியூசிலாந்து
பங்களாதேஷூக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஹாமில்டனில் நடந்தது. முதலில் பேட் செய்த பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் தமிம் இக்பாலின் சிறப்பான சதத்தால், 234 ரன் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் நீல் வாக்னர் 5 விக்கெட்டை அள்ளினார். சவுதி 3 விக்கெட்டையும் போல்ட், கிராண்ட்ஹோம் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை நியூசிலாந்து அணி, 6 விக்கெட் இழப்புக்கு 715 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணி, ஒரு இன்னிங்ஸில் எடுத்துள்ள அதிகப்பட்ச ஸ்கோர் இது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இரட்டை சதம் அடித்தார்.
இதையடுத்து பங்களாதேஷ் அணி, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப் புக்கு 174 ரன் எடுத்திருந்தது. கடைசி நாள் ஆட்டம் இன்று நடந்தது. சவும்யா சர்கார் 149 ரன்னும் கேப்டன் மஹமத்துல்லா 146 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்ததும் அடுத்து வந்தவர்கள் யாரும் நிலைக்கவில்லை. இதனால் அந்த அணி, 429 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது.
நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்துவீச்சாளர்கள் டிரெண்ட் போல்ட் 5 விக்கெட்டையும் டிம் சவுதி 3 விக்கெட்டையும் நீல் வாக்னர் 2 விக்கெட் டையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னலை பெற் றுள்ளது.