நியூசிலாந்துக்கு எதிராக இந்திய மகளிர் அணி தோற்றது எப்படி? ஆட்டம் மாறியது எங்கே?
நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. ஹாமில்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. அதனால் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ரன்களை எடுத்தது.
261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. ஆறாவது ஓவர் முதலே சீரான இடைவெளியில் இந்தியா விக்கெட்டை இழந்து கொண்டிருந்தது. ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, யாஷ்திகா பாட்டியா, கேப்டன் மிதாலி ராஜ், ரிச்சா கோஷ், சினே ராணா, பூஜா, ஹர்மன்பிரீத், ஜூலான் கோஸ்வாமி, ராஜேஷ்வரி என 10 விக்கெட்டுகளை 46.4 ஓவர்களில் இழந்தது இந்தியா. இதில் ஐந்து வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். முடிவில் 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டத்தையும் இழந்தது இந்தியா.
அடுத்ததாக வரும் 12-ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது இந்தியா. முதல் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
ஆட்டம் மாறியது எங்கே?
நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இந்தியா மூன்று கேட்ச்களை நழுவ விட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நியூசிலாந்து அணியின் வீராங்கனைகள் அமெலியா கெர் மற்றும் கேட்டி மார்ட்டின் முறையே 50 மற்றும் 41 ரன்களை எடுத்தனர். அவர்கள் இருவரும் எடுத்திருந்த அந்த 91 ரன்கள் இந்தியாவின் வெற்றி வாய்ப்பை பறித்தது என்றே சொல்லலாம். அவர்களது கேட்ச்சை இந்தியா பிடிக்க தவறிய போது அமெலியா 2 ரன்களும், கேட்டி 1 ரன்னும் எடுத்திருந்தனர்.

