ஐபிஎல்-ல் நியூசிலாந்து வீரர்கள் கலந்துகொள்வார்களா? - நியூசி., கிரிக்கெட் வாரியம் விளக்கம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட இருக்கும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்க நியூசிலாந்து வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. பின்பு, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம், வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம், ஐக்கிய அரபு அமீரகம், நியூசிலாந்து ஆகியவை பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதால், அந்தத் தேதிகளை பயன்படுத்தி ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ நடத்துகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நியூசிலாந்து கிரிக்கெட் ரிச்சர்ட் பூக் "ஐபிஎல் போட்டியை பொறுத்தவரையில் அதில் தொடர்புடைய எங்கள் வீரர்களுக்கு தடையில்லா சான்றிதழை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வழங்கும். அந்த போட்டியில் பங்கேற்பது குறித்து வீரர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். போட்டி தொடர்பாக எங்களுக்கு கிடைக்கும் தகவல்களை வீரர்களுக்கு வழங்குவோம்" என்று தெரிவித்தார்.