கோலி.. பும்ரா.. சொதப்பல் : தோல்விக்கு காரணம் இதுதானா ?

கோலி.. பும்ரா.. சொதப்பல் : தோல்விக்கு காரணம் இதுதானா ?
கோலி.. பும்ரா.. சொதப்பல் : தோல்விக்கு காரணம் இதுதானா ?

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு போட்டியைக்கூட வெல்ல முடியாமல் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணிக்கு, ஒருநாள் தொடரில் ஏன் இந்தச் சறுக்கல் ? என்ற கேள்வி கிரிக்கெட் வட்டாரத்தில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. இதனால் இந்திய அணியினரை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்தத் தோல்விக்கான காரணங்களும் பல்வேறு தரப்பிலிருந்து வரத் தொடங்கியுள்ளன.

பொதுவாக டி20 தொடரை பொறுத்தவரை குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டி என்பதால் அதிரடியான ஆட்டம் தேவைப்படுகிறது. எந்த அணி பயம் அறியாமல் அதிரடியாக விளையாடுகிறதோ அந்த அணியே டி20 போட்டியில் பெரும்பாலும் வெற்றியை சுவைக்கும். இதற்கு இளம் வீரர்களின் படையை கொண்ட ஒரு அணிதான் சரியாக இருக்கும். அந்த வகையில் தற்போதைய இந்திய அணி இளம் படையினருக்கு பஞ்சமில்லாத அணியாக திகழ்கிறது.

விராட் கோலி, ரோகித் ஷர்மா மற்றும் ஜடேஜா ஆகியோரை தவிர அனைவருமே இளம் படையினராக இருக்கின்றனர். மேற்கண்ட மூன்று பேரும் கூட அனுபவம் கொண்டவர்கள் என்பதை தவிர்த்து பார்த்தால் இளம் வீரர்கள்தான். இதனால் நியூசிலாந்தை இந்தியா டி20 போட்டிகளில் ஊதித்தள்ளியது. இதுமட்டுமின்றி டி20 போட்டிகளில் ஒரு வீரர் 4 ஓவர்கள் தான் வீச முடியும். இதனால் பந்துவீச்சை கணிப்பது கடினம். இதுவும் இந்தியாவிற்குப் பலமாக அமைந்தது.

ஆனால் ஒருநாள் தொடர் என்பது அப்படியல்ல. ஒரு பவுலர் 10 ஓவர்கள் பந்து வீசக்கூடும். பேட்ஸ்மேன்களும் 50 ஓவர்கள் நிலைத்து ஆட வேண்டும். இதற்கு சரியான அனுபவம் தேவை. களத்தை கணிக்க வேண்டும். இந்திய அணியில் தூண்களாக திகழும் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் தவான் ஆகிய இருவருமே அணியில் இல்லை. இதுவே அந்நிய மண்ணில் விளையாடும்போது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு தான். அந்த இடத்தை இளம் வீரர்களான பிருத்வி ஷா மற்றும் மயங்க் அகர்வாலால் நிரப்ப முடியவில்லை.

அது மட்டுமின்றி இந்திய அணியின் ரன் மிஷனாக இருக்கும் கேப்டன் விராட் கோலியும் இந்தத் தொடரில் பெரிதும் ரன்களை குவிக்கவில்லை. இதனால் இந்திய அணி தடுமாற்றம் கண்டது. இருந்தாலும் இந்திய அணி இத்தொடரில் அதிக ரன்களை குவித்ததற்கு காரணம் கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் தான். இவர்கள் இவருமே தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனாலும் இலக்கை எதிர்த்து அடிக்கும்போது கோலி சொற்ப ரன்களில் அவுட் ஆகியதும், நிலையை சீர் செய்ய சீனியர்கள் யாரும் களத்தில் இல்லை என்பது பளீச் என்று தெரிந்தது.

பேட்டிங்கில் இப்படி குறைகள் என்றால் பவுலிங்கில் அதைவிட மோசமான நிலையே இருந்தது. குறிப்பாக ஒருநாள் போட்டிக்கான சர்வதேச தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஜஸ்ப்ரித் பும்ரா ஒரு விக்கெட்டை கூட இந்த ஒருநாள் தொடரில் கைப்பற்றவில்லை. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் யஷ்வேந்திர சாஹலை தவிர, மற்றவர்கள் யாரும் விக்கெட்டுகளை குவிக்கவில்லை. ஆனால் ரன்களை வாரிக் குவித்தனர். இதனால் நியூசிலாந்து அணியை கட்டுப்படுத்துவது இந்திய அணிக்கு பெரும் சிரமமாக ஆகியது. இந்திய அணியின் பேட்டிங்கும், பவுலிங்கும் நேரெதிர் துருவங்களில் இருந்தன.

முதல் போட்டியில் 347 ரன்கள் குவித்திருந்த இந்திய அணியால், அந்த இலக்கிற்குள் நியூசிலாந்தை தடுக்க முடியவில்லை. அதேசமயம் 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை 273 ரன்களில் மடக்கிய இந்திய அணியால், அந்த ரன்களை எதிர்த்து அடிக்க முடியவில்லை. இதேபோன்று 3வது ஒருநாள் போட்டியில் 296 ரன்கள் சேர்த்த இந்திய அணியால், அதற்குள் நியூசிலாந்து அணியை சுருட்ட முடியவில்லை. இவ்வாறு ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணியின் பேட்டிங்கும், பவுலிங்கும் தொடர்பில்லாமலே சென்றுவிட்டது. இந்திய அணியின் இந்த நிலை மாற வேண்டுமென்றால் அணியில் அடிக்கடி மாற்றம் செய்வதை கைவிடுத்து, நிலையான அணியை உருவாக்க வேண்டும் என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com